2009-12-19 16:39:41

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
கிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்த நேரத்தில், பல பங்குகளில், பள்ளிகளில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். சிறப்பாக, கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலிக்கு முன் இயேசுவின் பிறப்பைப் பற்றி குழந்தைகள் நடிக்கும் இந்த நாடகங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது முதல் காட்சி. நீர் கடவுளின் தாயாவீர் என்று வானதூதர் சொன்னதும், மரியா தலை வணங்கி, இதோ, ஆண்டவரின் அடிமை என்பார். காட்சி மாறும். மரியா எலிசபெத்தைச் சந்திப்பார். எலிசபெத் மரியாவை வாழ்த்துவார். மரியா "என் ஆன்மா இறவனைப் புகழ்கிறது" என்று பாடி ஆடுவார். பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... காட்சிகள் தொடரும்.
அமைதியான, அழகான காட்சிகள்... நடிப்பவர்கள் எல்லாரும் குழந்தைகள் என்பதால், ரசிப்போம், சிரிப்போம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு நாடகம், அதற்கு பின் திருப்பலி எல்லாம் முடிந்து வரும் போது, குழந்தைகளின் அந்த நாடகம் பற்றி பேசிக் கொண்டே வந்தோம். அப்போது ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்றார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.
முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. இந்தச் சூழலைப்பற்றி அதிகம் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி சிந்திப்போம்.
யூதேயா முழுவதும் ரோமைய ஆதிக்கம், அராஜகம். இந்த அடக்கு முறைக்கு ரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ எந்த நேரத்திலும் இந்தப் பெண்களுக்குப் படைவீர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்த நாட்டுப் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கேட்டு வருகிறோம்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழும் ஒரு இளவயது கிராமத்துப் பெண்ணை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அவர் பெயர் மரியா.
தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையிலடைக்கப் பட்டதைப் போல் உணர்ந்த மரியாவின் உள்ளத்திலிருந்து "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா?" என்று எழுந்த வேண்டுதலுக்கு விடை வருகிறது. மணமாகாத அவரை இறைவன் தாயாக அழைக்கிறார்.
இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைக்கான தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால் அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. இதுபோன்ற தண்டனைகளை நேரில் பார்த்து வேதனைபட்டிருப்பார் அவர். இறைவன் தந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறாய் எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொள்வதும்.. எல்லாம் ஒன்று தான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொல்கிறார். அவரது உறவினராகிய எலிசபெத் கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தை பேறு இல்லாமல், அழுது புலம்பி, ஊராரின் பழிச் சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக் கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார். இங்குதான் இன்றைய நற்செய்தி ஆரம்பிக்கிறது. 
லூக்கா நற்செய்தி 1: 39-45
அக்காலத்தில் அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

கன்னியான ஒரு பெண் தாயாகப்போகும் செய்தியை அவரது குடும்பம் ஏற்காது, யூத சமூகம் ஏற்காது. மலடியென்று இகழப்பட்ட ஒரு பெண், அதுவும் குழந்தை பெறும் வயதைத் தாண்டிய ஒரு பெண் தாயாகப்போகும் செய்தியை அவரது குடும்பம் நம்பாது, யூத சமூகமும் நம்பாது. ஏற்க முடியாத, நம்ப முடியாத செய்திகளை உள்ளத்திலும், உடலிலும் தாங்கிய இரு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.
இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை இவ்விரு பெண்களின் வாழ்வும் நமக்குக் கூறுகிறது. எலிசபெத்தின் வாழ்வில் இறைவன் மெதுவாக, நிதானமாக, மிக, மிக நிதானமாகச் செயல்படுகின்றார். ஆண்டுகள் பலவாய் குழந்தைப் பேற்றுக்காக அவர் வேண்டி வந்தார். வயது கூட, கூட இனி தன் வாழ்வில் குழந்தைப் பேறு இல்லையென்ற தீர்மானத்திற்கு அவர் வந்த வேளையில், இறைவன் அவர் வாழ்வில் குறிக்கிடுகிறார். நம்ப முடியாத ஒரு செயலை நிகழ்த்துகிறார்.
நாமும் வாழ்வில் பல ஆண்டுகளாய் வேண்டி காத்திருந்த ஒரு காரியம், திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நம் வாழ்வில் வருவதில்லையா?
மரியாவின் வாழ்வில் இறைவன் மிக வேகமாகச் செயல்படுகின்றார். மரியா மீட்புக்காகக் காத்திருந்தது உண்மை; ஆனால், அந்த மீட்புக்கு அவரே வழியாவதை அவரால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.
மிகத் தாமதமாகவோ, அல்லது புயல் வேகத்திலோ வாழ்வில் காரியங்கள் நடக்கும் போது, கூடவே கேள்விகள் பலவும் எழுகின்றன. ஏன் எனக்கு? ஏன் இப்போது?
இதுபோன்ற கேள்விகளை எலிசபெத்தும் மரியாவும் கேட்டனர். நாம் வாசித்த நற்செய்தியில் இந்தக் கேள்வி கூறப்பட்டுள்ளது. “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”
கேள்விகள் எழுவது இயற்கை. ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள், விளக்கங்கள் கிடைக்காது. மரியாவும், எலிசபெத்தும் சந்தித்தபோது ஒரு சில கேள்விகள் எழுந்தன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. அவர்கள் சந்தித்த போது, இந்தக் கேள்விகளுக் கெல்லாம் விளக்கங்களைத் தேடவில்லை. கேள்விகள் கார் மேகங்களாக அவர்களைச் சூழ்ந்திருதாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை என்ற மழையில் அவர்கள் நனைந்தனர். அந்த சந்திப்பின் பெரும் பகுதி ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது.
எலிசபெத் மரியாவைப் புகழ்ந்த மொழிகள் மனிதர் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய, ஆனால், கேட்க அரிதான மொழிகள். "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை இப்படி வாழ்த்தினால், ஆசீர்வதித்தால் எவ்வளவு நலம் இந்த பூமியில் வளரும்! பிறரை வாழ்த்தும் போது, ஆசீர்வதிக்கும் போது நாமும் வாழ்த்தப் பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" என்று வாழ்த்தும் போது எழும் நிறைவு கேட்பவரையும் நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது.
நம் வாழ்வில், நம்மைச் சுற்றி பல துயர நிகழ்வுகள் நடக்கும் போது கேள்விகள் எழும். பதில்கள் கிடைக்காது. அதைவிட, வாழ்வில் நடக்கும் பல நல்லவைகளின் போதும், வாழ்வில் கிடைக்கும் பல கொடைகளின் போதும் கேள்விகள் எழும்... பதில்கள் கிடைக்காது.
இந்த கிறிஸ்மஸ் காலத்தில், பரிசுகளைப் பரிமாறுகிறோம். ஒரு குழந்தையிடம் விளையாட்டுக் கார் ஒன்றைப் பரிசாகத் தருவதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்தக் குழந்தையிடம் என்ன எதிர்பார்ப்போம்? நன்றி என்ற சொல், அல்லது அதற்கு ஈடாக ஒரு புன்னகை, அல்லது வியப்பு, மகிழ்ச்சி ஆரவாரம்... இப்படி எதிர்பார்ப்போம். இதற்குப் பதிலாக, அந்தக் குழந்தை நம்மிடம், "அங்கிள், இதை எங்க வாங்கினீங்க? இது நல்லா ஓடுமா? இது விலை என்ன? இது எனக்கு மட்டும்தானா? என் தம்பிக்கும் குடுப்பீங்களா?..." என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால், நமக்கு எப்படி இருக்கும்?

இறுதியாக ஒரு சிந்தனை. மலடி என்று இகழப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணும், கன்னியான ஒரு பெண்ணும் தாய்மைப் பேறு அடைந்ததைச் சிந்தித்து வருகிறோம்.  21ஆம் நூற்றாண்டில் வாழும் நம்மில் பலர் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். பிள்ளை பெற முடியாதவர்களும், கன்னிப் பெண்ணும் கருத்தரிப்பது பெரிய காரியமா? அதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? உயிரியலில் நாம் இப்போது அடைந்திருக்கும் முன்னேற்றங்களின் உதவியுடன் எந்தப் பெண்ணும் கருதரிக்கலாமே. அல்லது, மற்ற பெண்களின் உதவியுடன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாமே. இது என்ன பெரிய பிரமாதம்?
நாம் வாழும் கட்டுபாடற்ற வாழ்க்கை முறையில் எத்தனையோ கன்னிப்  பெண்கள், டீன் ஏஜ் வயதைக் கூட அடையாத சிறுமிகள் குழந்தை பெற முடியும், குழந்தை பெறுகின்றனர். இது என்ன பெரிய பிரமாதம்?
அன்புள்ளங்களே, இது என்ன பெரிய பிரமாதம் என்ற கேள்வியைக் கேட்கும் நம் மனநிலையைக் கொஞ்சம் ஆராய வேண்டும். நாம் வாழும் இந்த நாட்களில் எதுவுமே பிரமாதம் இல்லாமல் போய்விடுகிறதோ என்ற கவலை எனக்கு. எதையுமே பிரமாதமாக எண்ணி, பிரமிப்பாகப் பார்த்து வியக்கும் மனம் குழந்தைகளுக்கு உண்டு. அந்த வியப்பில், பிரமிப்பில் அவர்கள் கண்கள் விரியும், புன்னகை, சிரிப்பு பெருகி வரும். அழகான ஒரு காட்சி அது. குழந்தைகளிடம் நாம் எதிபார்ப்பதும் இதைத்தான். ஆனால், வளர, வளர இந்த வியப்பு குறைந்து விடுகிறது. பாவம், நாம் எல்லாருமே!
வியக்கக் கூடிய, பிரமிக்கக் கூடிய குழந்தை மனதை நாம் பேணி காத்து வரும் வரை நம்மால் சின்னச் சின்ன அற்புதங்களைப் பார்த்து மகிழ முடியும். அற்புதங்களுக்கு வாழ்க்கையில் பஞ்சமிருக்காது. அந்த பிரமிக்கும் மனம் நம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் பொது, வாழ்க்கையில் அற்புதங்களுக்குப் பஞ்சம் ஏற்படும். இதனால் யாருக்கு நஷ்டம்? நமக்குத்தான்.

நல்லவைகள் வாழ்வில் நடக்கும் போது, கொடைகளைப் பெறும் போது, கேள்விகள் கேட்டு, விடைகள், விளக்கங்கள் தேடி நம் அறிவை நிரப்புவதற்கு பதில், நன்றியால் நம் மனதை நிரப்ப முயல்வோம். குழந்தைகளிடம் நாம் எதிர்பார்க்கும் நன்றி உணர்வை நாமும் வளர்த்துக் கொள்வது நல்லதுதானே!கருமேகங்களாய் சூழ்ந்து வரும் பிரச்சனைகள் மத்தியில் மின்னல் கீற்று போலத் தோன்றும் நல்லவைகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளவும், அந்த நல்லவைகள் கொஞ்சமாய் இருந்தாலும், மற்றவரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், மரியா, எலிசபெத் வழியாகப் பாடங்களைப் பயில்வோம்.







All the contents on this site are copyrighted ©.