டிச.17,2009 பங்களாதேஷ் மைமென்சிங் (Mymensingh) மறைமாவட்டத்தில் உள்ள மரியாவின் சேனை (Legion of Mary)
அங்கத்தினர்கள் தங்கள் செபங்களாலும் ஆலோசனை களாலும் குடிபழக்கத்திற்கு அடிமைகளாய் இருக்கும் பலரை நல் வழி கொணர்வதில் ஈடுபட்டுள்ளனர். ஈராண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த
முயற்சியால் பல குடும்பங்களில் இந்தப் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பை
வழிநடத்தும் அருட்சகோதரி ரேமா (Rema) கூறினார். குடிப்பழக்கத்தினால் பிரச்சனைகளைச் சந்திக்கும் பல
குடும்பங்களுக்கு மரியாவின் சேனை அங்கத்தினர்கள் சென்று குடும்பத்தினர் அனைவருடனும் அமர்ந்து பிரச்சனையைக்
குறித்து பேசுகின்றனர். குடி பழக்கமுடையவரும், குடும்பத்தினரும் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு
காண ஆர்வம் காட்டுவதாய் தெரிந்தால், மரியாவின் சேனை அங்கத்தினர்கள் அந்த குடும்பத்தினருடன்
செபத்தில் ஈடுபடுகின்றனர்; பின்னர் ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த முறையில் பல நாட்கள் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பலன்
கிடைத்துள்ளதென மரியாவின் சேனை பணிகளைக் குறித்து அருட்சகோதரி ரேமா விவரித்தார்.