2009-12-16 14:51:57

திருச்சபை சட்டங்களில் சில மாற்றங்கள்


டிச.16,2009 தியோக்கோன்களின் பணி பற்றி தெளிவுபடுத்தவும், சில கத்தோலிக்கரின் திருமண வாழ்வு நிலையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அகற்றுவதற்குமென திருச்சபை சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளில் திருப்பீடம் இவ்வாரத்தில் வெளியிட்ட “Omnium in Mente” அதாவது “அனைவரின் மனத்தில்” என்ற தலைப்பில் அவரின் சொந்த முன்னெடுப்பில் என்று பெயர் பெறும் “motu proprio” என்ற ஏட்டில் இந்த மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மாற்றங்கள் செய்வதற்கான தயாரிப்புகள் பாப்பிறை இரண்டாம் ஜான் பவலின் காலத்திலே தொடங்கப்பட்டிருந்தாலும், இதற்கு உலகின் ஆயர் பேரவைகளோடு நீண்ட கால ஆலோசனைகள் தேவைப்பட்டதால் இந்த டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டதாகத் திருப்பீடம் அறிவித்தது.
திருச்சபை சட்டங்கள் 1008, 1009, 1086, 1117, 1124 ஆகிய ஐந்து எண்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏடு பற்றிக் கருத்து தெரிவித்த திருச்சபை சட்டங்களுக்கான திருப்பீட அவைத் தலைவர் பேராயர் பிரான்செஸ்கோ கோக்கோபல்மெய்ரோ, திருச்சபையில் தாங்கள் கத்தோலிக்கர் அல்லர் என்று கருதும், மற்றும் தங்களது இந்நிலைக்கு தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கு முயற்சிக்காதவர்கள் ஆகியோரின் திருமணத்தின் மதிப்பைப் பாதுகாப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தக் கத்தோலிக்கரின் இப்போக்கு நடைமுறையில் குழப்பத்தையும் தவறுகளையும் ஏற்படுத்துகின்றது என்றும் பேராயர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.