இயேசு கடல் மீது நடந்த
புதுமை மத்தேயு, மாற்கு, யோவான் என்ற மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இயேசு 5000 பேருக்கு உணவளித்த
பிறகு அன்று மாலை அல்லது இரவே இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புதுமையின்
பின்னணியைப் பற்றி சிந்திக்க யோவான் நற்செய்தியின் துணையை நாடுவோம். யோவான் நற்செய்தியில் 5000 பேருக்கு
உணவளித்ததும், எழுதப்பட்டுள்ள வரிகள் இவை:
யோவான் நற்செய்தி:6/14-15 இயேசு
செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில்
இவரே ' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள்
என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப்
புகழ்ந்திருக்க வேண்டும்... அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை
ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்." என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். பல நேரங்களில் மக்கள் கூட்டமாக இருக்கும் போது அதுவும் கொஞ்சம் தீவிரமான உணர்வுகளுடன்
கூட்டம் கூடும்போது, ஒரு சிறு பொறி போதும் பெருந்தீயை உருவாக்க... பல நூறு ஆண்டுகளாய் ரோமைய அராஜகத்திற்குப்
பலியாகி வந்த யூதர்கள் நடுவே பல புரட்சிக் குழுக்கள் உருவாயின. ஒவ்வொரு ஆண்டும் எருசலேம் திருவிழாவில்
யூதர்கள் கூட்டமாய் வந்தபோது, புரட்சிப் பொறிகள் ஆங்காங்கே உருவானதால், கலகங்கள் உருவாகி வந்தன.
எனவே யூதர்கள் மத்தியில் கூட்டங்களே இருக்கக் கூடாதென்பது ரோமையச் சட்டம். இந்தச்
சட்டத்தை ஒருவகையில் மீறி வந்தார் இயேசு. நல்லவேளை... அவரைத் தேடி வந்த மக்கள் அப்பாவி
மக்கள். அதுவும் ஊருக்கு வெளியே கூடி வந்த கூட்டங்கள். எனவே, ரோமைய கவனத்தை இயேசு இன்னும் ஈர்க்கவில்லை.
இயேசுவைச் சுற்றிக் கூடி வந்த கூட்டம் அவரது சொற்களால் கட்டுண்டு இருந்தனர். அவர் பேசியதைக் கேட்டபோது, அதுவும்
அவர் இறை அரசு பற்றி கூறும்போது ஏகப்பட்ட நம்பிக்கை அந்த மக்கள் மனதில் எழுந்தது. ஒருவேளை இயேசு
சொல்லி வரும் அரசு உடனே பிறந்து விடும் என்று சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். இதுவரை இயேசுவின் சொல்திறமையைக்
கண்டு வியந்தவர்கள், இன்று அவர் செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப்
புதுமை இயேசுவின் மீது இருந்த மதிப்பை இன்னும் பல மடங்காக உயர்த்தியது. அவரை மானசீகமாக
தங்கள் மனங்களில் அரியணை ஏற்றிவிட்டனர். மனதில் அரியணை கொண்ட அரசன் அன்றாட வாழ்விலும் அரசன்
ஆனால் மிக நன்றாக இருக்குமே! தன் மக்களை நன்கு புரிந்து வைத்திருந்தார் இயேசு. எனவே,
அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள்
மத்தியிலிருந்து நழுவிச் சென்றார். முன்பு ஒரு முறை நாசரேத் தொழுகைக் கூடத்தில் அவர்
இதே போல் நழுவிச்சென்றது இயேசுவுக்கு கட்டாயம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது
அவரைச் சுற்றி இருந்த கூட்டம் அவரை மலையுச்சிக்கு கொண்டு செல்ல நினைத்தது. அரசராக்குவதற்கு
அல்ல, அந்த உச்சியிலிருந்து அவரைத் தள்ளி கொல்வதற்கு. அவர் அன்று சொன்னது அவர்களுக்கு கசப்பாக
இருந்தது. இன்று இந்த கூட்டமும் அவரை உச்சிக்குக் கொண்டு செல்ல விழைகிறது. இயேசு மனதுக்குள் கட்டாயம்
சிரித்திருப்பார். கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில்
கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும்.
அன்று நாசரேத்தூரில் தப்பித்துச் சென்றது போலவே, இன்றும் இயேசு கூட்டத்திலிருந்து கிளம்பி
விட்டார். எதற்காக? தனித்திருக்க. செபிக்க. "அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு
மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்." இது யோவானின் கூற்று. இந்தக் கூற்றில் முக்கியமான ஒரு
வார்த்தை... மீண்டும். அதாவது, இயேசு அடிக்கடி செய்யும் ஒரு செயல்: தனியே மலைக்குச்
செல்லுதல். தன் பணியின் நடுவில், சிறப்பாக ஒவ்வொரு நாளும் தன் பணி முடிந்து மாலையில் தனியே
மலைக்குச் சென்றிருக்கிறார். தன் தந்தையுடன் உறவாட, உரையாட... மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று எனக்குள் பளிச்சிடுகிறது.
கோஷம் போடும் கும்பல் பாடும் துதிகளிலேயே மயங்கி கனவு காணும் நமது தலைவர்கள் அவ்வப்போது
இப்படி கூட்டத்திலிருந்து தப்பித்து போய், தனியே தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன்
கிடைக்கும்? ஹூம்... அன்பர்களே, இப்போது நீங்கள் கேட்டது என் ஏக்கப் பெருமூச்சு.
தந்தையோடு தனியே
உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத்
தேடி வருகிறார். செபமும் வாழ்வும், செபமும் சேவையும் இயேசுவில் அழகாக இணைந்தன. இயேசு
சீடர்களைத் தேடி வந்த போது அவர்கள் நடுக்கடலில் போராடியதைக் கண்டார். கடல் மீது நடந்தார். திருப்பாடல்கள்89 /9 நினைவுக்கு வருகிறது: கொந்தளிக்கும்
கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்: பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்.
ரோமையப்
பேரரசைக் கவிழ்க்க உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள் என்று இயேசுவை அரசராக்க வந்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு.
காரணம்? அவரது அரசு, அவரது பணி ரோமைய சக்திக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை இயேசு விரும்பவில்லை.
மாறாக, இவ்வுலக, மறு உலக சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவரது
விருப்பம். புனித பவுலின் கூற்று இயேசுவின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாய் உள்ளது.
எபேசியருக்கு
எழுதிய திருமுகம் 6: 12 ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை.
ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர்,
வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.
இந்த சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு
வருவதைக் காட்டும் வகையில் இயேசு கடல் மீது நடந்தார்.
தொடக்கநூலில் சொல்லப்பட்ட முதல் வரிகள் மீண்டும் இங்கு நிறைவேறுகின்றன. தொடக்கநூல்
1/1-2 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல்
கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
படைப்பின் துவக்கத்தில், இருள் சூழ்ந்திருந்தது. நீர்த்திரளின் மீது
ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. இங்கும், இருள் சூழ்ந்திருந்தது. நீர்த்திரளின் மீது
இயேசு நடந்தார். கடல் மீது நடந்து வருவது இயேசுதான் என்பதைச் சீடர்களால் உணர்ந்து
கொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்திருந்த கடல்
அலைகளிலும் காற்றிலுமே இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்க முடியவில்லை. துன்பங்கள்,
போராட்டங்கள் நேரத்தில் கடவுளைப் பார்க்கமுடியாமல், கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப்
போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்? எப்போதோ வாசித்த ஒரு உவமைக் கதை இது. நீங்களும்
கட்டாயம் கேட்டிருப்பீர்கள். மீண்டும் நினைவு படுத்துகிறேன். மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப்
பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக
பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு
சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி
பார்த்த போது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தில், போராட்டத்தில் கஷ்டப்பட்ட
நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு
போய் விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும்
அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்து விட்டு அவசர
முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்
கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.
கடல் நடுவே, புயல் நடுவே தங்களைத் தேடி வரும்
இறைவனை, இயேசுவை சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இன்னும் பரிதாபமான நிலை அங்கு.
தேடி வரும் கடவுளை பேய் என்று பார்க்கின்றனர் சீடர்கள். அவ்வளவு மாறிப்போயிருந்தது அவர்கள்
பார்வை. இயேசு அருகில் வந்து, "அஞ்சாதீர்" என்றார். நற்செய்தியில் இயேசு அதிகமாகப் பயன்படுத்தியுள்ள
ஒரு வார்த்தை: அஞ்சாதீர்கள், அல்லது கலங்காதீர்கள். ஏசுவைப் பற்றி முதல் நற்செய்தியை
இடையர்களுக்கு அறிவித்த வான தூதர்கள் இதே வார்த்தையை வைத்து தான் நற்செய்தியை ஆரம்பித்தனர்.
"அஞ்சாதீர்கள். இதோ மக்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு
அறிவிக்கிறேன்." (லூக். 2:10) அஞ்சாதீர் என்று சொல்லி இயேசு படகில் ஏறியதும்,
காற்று அடங்கியது. படகு கரை சேர்ந்தது. யோவானும் மாற்கும் இந்தப் புதுமையை இதோடு முடித்துவிடுகின்றனர்.
ஆனால் மத்தேயு இன்னுமொரு புதுமையை இங்கு சேர்க்கின்றார். அந்தப் பகுதியைக் கூறும் நற்செய்தியைக்
கேட்போம். மத்தேயு நற்செய்தி 14/26-32 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர்
கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்;
நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும்
படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று
வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார்.
இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'
என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து,
'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.
சென்ற வார விவிலியத் தேடலில் பெருமளவு மீன்பிடிப்பைக்
கண்டதும் "ஆண்டவரே, நான் பாவி. என்னை விட்டு அகலும்" என்று கூறிய பேதுருவைச் சந்தித்தோம்.
இன்று பேதுருவின் மற்றொரு பக்கம். சிறு குழந்தைகளைப் பெரியவர்கள் தூக்கி போட்டு பிடிக்கும்
விளையாட்டைப் பார்த்திருப்போம். அந்தக் குழந்தை எந்த வித பயமும் இல்லாமல், சிரித்தபடியே
வானத்தில் பறக்கும் காட்சி அழகாய் இருக்கும். அப்பாவோ, அம்மாவோ அருகிருக்கிறார்கள் என்று
தெரிந்தால் குழந்தைகளுக்கு அசாத்திய வீரம் வந்து விடும். தீப்பிடித்து எரியும் ஒரு
வீட்டின் முதல் மாடியில் ஒரு சிறுமி அகப்பட்டுக் கொண்டாள். கீழே இருந்து தந்தை அந்தச்
சிறுமியைக் குத்திக்கச் சொல்கிறார். குழந்தை அங்கிருந்து கத்துகிறாள்: "அப்பா, ஒன்னும்
தெரியலியே. ஒரே புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" அப்பா கீழிருந்தபடியே சொல்கிறார்:
"உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது.
குதிம்மா." என்று தந்தை சொன்னதை நம்பி குதிக்கிறாள் சிறுமி, தந்தையின் பாதுகாப்பிற்குள்.
பேதுரு ஒரு குழந்தை போல பேசுகிறார். இயேசுவும் ஒரு குழந்தையாக மாறி ஒரு விளையாட்டை
ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை என சுற்றிலும் பயமுறுத்தும்
சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால். பேதுருவும் துணிகிறார்.
தன் நண்பர்களை, தனக்குப் பழக்கமான படகை விட்டு இதுவரைச் செய்யத் துணியாத ஒரு செயலில்
இறங்குகிறார். பேயாய் இருக்குமோ என்று பயந்த ஒரு உருவத்தின் குரல் கேட்டதும், பேதுருவுக்குள்
அத்தனை மாற்றங்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இயேசுதான் என்று தெரிந்ததும், தான்
இதுவரை பாதுகாப்பு என்று நினைத்த படகை, நண்பர்களை விட்டு பழக்கமில்லாத ஒரு சூழலுக்குள்
துணிந்து இறங்குகிறார். இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், இயேசு
பேதுருவுக்கு அந்த சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம்.
அப்படி செய்யவில்லை. வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகு தான், பிரச்சனைகளைஎல்லாம்
தீர்ந்த பிறகு தான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம்
எண்ணங்கள் தவறு; மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து
சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார். பிரச்சனைகள்
இருக்கத்தான் செய்யும்... அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும்... அஞ்சாதீர்கள்,
துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு வருவார். கிறிஸ்மஸ்
காலம் இது. எனவே அன்று வானதூதர் சொன்ன அந்த முதல் நற்செய்தியுடன் நம் சிந்தனைகளை நிறைவு
செய்வோம். "அஞ்சாதீர்கள். இதோ மக்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கிறேன்." (லூக். 2/10)