2009-12-11 15:34:24

இலங்கை அரசுத்தலைவர் மகிந்திரா ராஜபக்சா மடு மாதா ஆலயத்திற்குச் சென்றார்


டிச.11,2009 இலங்கை அரசுத்தலைவர் மகிந்திரா ராஜபக்சா இப்புதனன்று கொழும்புவிலுள்ள புகழ்பெற்ற மடு மாதா ஆலயத்திற்கு தன் அரசு அதிகாரிகளுடன் சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். கொழும்புவிலுள்ள அரசு அலுவலகத்திலிருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க இந்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டதென கொழும்பு தலத் திருச்சபை அறிவித்துள்ளது. புத்த மதத்தைச் சார்ந்த தலைவர் ராஜபக்சாவை திருத்தலத்தின் வாசலில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். ராஜபக்சாவின் வருகையின் போது, கொழும்புக்கு அருகிலிருந்த முகாம்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட அகதிகளும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர். இந்த வருகையின் போது, ராஜபக்சா, மடு மாதா திருத்தலத்தின் வசதிகளைப் பெருக்குவது குறித்து ஆயருடனும், குருக்களுடனும் கலந்து பேசினார் என்றும், விரைவில் இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் நல்லிணக்கம் உருவாக தன்னால் இயன்ற அளவு உழைப்பதாகக் கூறினார் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால், 2005ஆம் ஆண்டிலிருந்து மடு மாதா திருத்தலத்திற்கு திருப்பயணிகள் பெருமளவில் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. மே மாதம் முடிவடைந்த போருக்கு பின் இந்தத் தடை நீக்கப்பட்டபின் அரசுத் தலைவர் ராஜபக்சா முதல் முறையாக இத்திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.