2009-12-07 16:27:55

நற்செய்தி ஒரு புராணக் கதை அல்ல-திருத்தந்தை


டிச.07,2009 நற்செய்தி ஒரு கட்டுக்கதை அல்ல, ஆனால் அது உண்மையான கதையின் வரலாறு மற்றும் நாசரேத்தூர் இயேசு, வரலாற்று குணச்சித்திர மனிதர் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளால் நிரம்பி வழிந்த வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இத்திங்களன்று தொடங்கிய ஐ.நா.வெப்பநிலை மாநாட்டையும் நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.

திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக்.3:1-6) மையமாக வைத்துப் பேசிய திருத்தந்தை, இப்பகுதியில் 27 மற்றும் 28ம் ஆண்டுகளின் அனைத்து பாலஸ்தீனிய அரசியல் மற்றும் சமய அதிகாரிகள் பற்றி நிறையவே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

எனவே "நற்செய்தியை வாசிக்கும் அல்லது அதனைக் கேட்கும் அனைவரும் அது புராணக் கதை அல்ல, மாறாக அது ஓர் உண்மையான கதையின் வரலாறு என்றும் சரியான சூழலில் புகுத்தப்பட்ட வரலாற்று மனிதர் நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு என்றும் நற்செயதியாளர் சொல்ல விரும்பியுள்ளார்" என்று திருத்தந்தை கூறினார்.

இந்தப் பாலஸ்தீன அதிகாரிகள் பற்றி நிறையச் சொல்லியிருப்பதற்கான இரண்டாவது காரணமும் உள்ளது என்ற திருத்தந்தை, அதில் சொல்லப்பட்டவர் இறைவார்த்தையாகவும் மாறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

RealAudioMP3 இந்த இறைவார்த்தை, வரலாற்றை நகர்த்தும் ஒரு மனிதர், இறைவாக்கினர்களுக்கு உள்தூண்டுதலாக இருந்தவர், கன்னிமரியின் வயிற்றில் கருவான இயேசுவே அந்த இறைவார்த்தை, கிறிஸ்துவில் கடவுள் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவர் நமக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறார், அவரின் உண்மையையும் அருளையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

புனித அம்புரோஸ் சொல்லியிருப்பது போல, "முன்னர் பாலைநிலமாக இருந்த பூமி நமக்கு கனிகளைத் தரும் பொருட்டு இறைவார்த்தை இப்பூமிக்கு இறங்கி வந்தது" என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

மேலும், டிசம்பர் 8, அமலோற்பவ அன்னையின் விழா சிறப்பிக்கப்படுவதை நினைவுபடுத்திய திருத்தந்தை, மரியா பாவமில்லாதவள், திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் பாவிகளாக இருப்பதால் அது தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றது என்று கூறினார்

பாலைநிலத்திற்கும் தோட்டத்திற்குமிடையே, நிலத்தை வறட்சியாக்கும் பாவத்திற்கும் அதனை வளப்படுத்தும் திருஅருளுக்கும் இடையே திருச்சபையில் தொடர் போராட்டம் இடம் பெற்று வருகிறது, எனவே, இத்திருவருகை காலத்தில் நமது பாதைகளை நேராக்க ஆண்டவரின் தாயிடம் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.