2009-12-04 16:56:26

நம்பிக்கை செய்தி - வத்திக்கானும் இரஷ்யாவும் தங்களுக்கிடையே “முழு அரசியல் உறவை” ஏற்படுத்துவதற்கு இசைவு


டிச.04,2009 வத்திக்கானும் இரஷ்யாவும் தங்களுக்கிடையே “முழு அரசியல் உறவுகளை” ஏற்படுத்துவதற்கு இசைவு தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரஷ்ய அரசுத் தலைவர் திமித்ரி மெத்வேதேவுக்கும் (Dmitry Medvedev) திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கும் இடையே வத்திக்கானில் இவ்வியாழன் மாலை இடம் பெற்ற சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்ட திருப்பீட பத்தரிகை அலுவலகம் இதனை அறிவித்தது.

இவ்விரு தலைவர்களும் ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடியதாகவும், இனிதே இடம் பெற்ற இச்சந்திப்பில் வத்திக்கானும் இரஷ்யாவும் தங்களுக்கிடையே “முழு அரசியல் உறவுகளை” ஏற்படுத்துவதற்கு இசைவு தெரிவித்ததாகவும் அவ்வலுவலகம் கூறியது.

இரஷ்ய அரசுத் தலைவர், திருத்தந்தையைச் சந்திக்கும் முன்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே (Tarcisio Bertone), திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தியையும், (Dominique Mamberti) சந்தித்தார்.

இரஷ்ய வெளியுறவு அமைச்சர் Serghei Lavrov உட்பட ஒரு பெரிய பிரதிநிதி குழுவுடன் வத்திக்கானில் இச்சந்திப்பை நடத்தியுள்ளார் இரஷ்ய அரசுத் தலைவர் திமித்ரி மெத்வேதேவ்.

இச்ந்திப்பு பற்றி நிருபர்களிடம் பேசிய மெத்வேதேவ், வத்திக்கானும் இரஷ்யாவும் ஏற்கனவே தமது பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது, தற்பொழுது அது முழு தூதரக ரீதியில் செயல்பட இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

1989ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி அப்போதைய தலைவர் மிக்கேல் கோர்பஷேவ், திருத்தந்தை 2ம் ஜான் பவுலை வத்திக்கானில் சந்தித்த போதே இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவு ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.