2009-12-04 17:33:05

திருவருகைகாலச் சிந்தனை


திருவருகைகாலச் சிந்தனை வழங்குபவர் அருள்சகோதரர் ரோச் சே.ச

RealAudioMP3
இயேசுவின் பிறப்பிலே இடையர்களும் ஆடு மாடுகளும்

ஊருக்கு வெளியே புறந்தள்ளப்பட்ட தலித் மக்களை, நிறத்தால் புறந்தள்ளப்பட்ட கருப்பின மக்களை, இனத்தால் அழிக்கப்பட்டு குற்றுயிராய் கம்பி வேலிக்குள் வாழ்க்கையைக் கழிக்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களை, தன் உயிரினும் மேலான நிலத்தை இழந்து புறம்போக்கப்பட்ட ஆதிவாசி மக்களை இந்த இடையர்கள் அடையாளப்படுத்துகின்றனர். பணம் படைத்தோர் பூட்டிய அறைக்குள் போத்திய போர்வைக்குள் சுகமாக தூங்கிக் கொண்டிருக்க, சாலை ஓரங்களிலும் வீதிகளிலும் உடலை முழுவதுமாக மறைக்கக்கூட ஆடையின்றி குளிரிலே கூனிக் குறுகிக் கொண்டிருக்கும் தெருவொரச் சிறார்களையும் பிச்சைக்காரர்களையுமே இந்த இடையர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக் 2:10) என வானதூதர்கள் இவர்களிடம் சொல்வதும், இவர்கள் வயல்வெளியை விட்டு தாவீதின் ஊரான பெத்லகேம் நோக்கி விரைந்து செல்வதும் (லூக் 2:15) இவர்கள் விளிம்பிலிருந்து மையத்திற்கு செல்ல வேண்டிய நற்செய்தியைக் கூறுகிறது. உலக மீட்பு, மானிடர் அனைவரின் மீட்பு இத்தகைய விளிம்பு நிலையிலிருப்போரிலிருந்தே புரட்சி வெடிக்கும் என்பதையும் இது சுட்டுகிறது. உலகப் பார்வையில் கடைசியானோர், ஆண்டவர் பார்வையில் முதன்மையானோராக (மத் 20:16) இருப்பதையே இது காட்டுகிறது.

மேலும், பண்படுத்தவும் பாதுகாக்கவும் கடவுள் கொடுத்த இவ்வுலகையும் (தொநூ 2:15) அதிலுள்ள அனைத்தையும் மனிதர் பயன்படுத்தி தூக்கியெறிய ஆரம்பித்ததின் விளைவை இன்று கண்ணீரோடு அறுவடைச் செய்து கொண்டு இருக்கின்றோம். உலகம் அதி வெப்பமாதல், பருவநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, காடுகள் அழிப்பு, நிலம்-நீர்-காற்று மாசுபாடு, பூகம்பம், சுனாமி, அமில மழை, வறட்சி என பண்பரிமாணம் எடுத்துள்ளது. குடிலில் ஆடு, மாடு பொம்மைகளை இயேசுவைப் பார்த்து திருப்பி வைக்கிற நாம் இயேசு பார்க்கின்ற மாதிரி இயற்கையை இரசித்து, அதிலிருந்து கற்றுக் கொள்கின்றோமா? பல உவமைகளில் இயற்கையை நமக்கு நூலகமாகக் காட்டுகிறார் இயேசு. விலங்குகளை வேட்டையாடுதலில் கொடங்கி மரபணு ஆய்வுக்காக பல உயிரிகளை ஆய்வகங்களில கொன்று குவிப்பது வரை மனிதரின் 'தான்' என்கிற அகங்காரம் விஷ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. குடிலில் உள்ள ஆடு மாடுகளும் குடிலுக்கு வெளியே உள்ள மரங்களும் குழந்தை இயேசுவின் காதில் கொல்வதெல்லாம் ', எங்களையும் வாழவிடச் சொல்லுங்கள் இந்த மனிதர்களை' என்பதே.








All the contents on this site are copyrighted ©.