2009-12-04 16:55:23

கிறிஸ்தவ சபைகளுக்குள் சகோதரத்துவமும் அமைதியும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் - திருத்தந்தை


டிச.04,2009 நம் ஆண்டவரின் புதிய கட்டளைக்குப் பணிந்து நடக்கும் விதத்தில் கிறிஸ்தவ சபைகளுக்குள் சகோதரத்துவமும் அமைதியும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் தலைவர் பேராயர் அனஸ்தாசிடம் (Anastas) கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் சபை பிதாப்பிதா அனஸ்தாஸ் தலைமையில் வந்த குழுவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அல்பேனியாவில் இப்பேராயர் உருவாக்கியுள்ள இரண்டு முக்கிய நடவடிக்கைகளாகிய, பலமதத்தவர் விவிலிய கழகம் மற்றும் பல்சமய் உறவுகளுக்கான குழு பற்றிய தனது பாராட்டுதல்களை தெரிவித்தார்.

இக்காலத்தின் தேவைக்கேற்ப தொடங்கப்பட்டுள்ள இம்முயற்சிகள், கத்தோலிக்கர் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையே மட்டுமல்லாமல், பிற கிறிஸ்தவ சபைகள், முஸ்லீம்கள் மற்றும் பெக்டாஷி Bektashi மதங்களுக்கிடையே புரிந்து கொள்ளுதலையும் உறுதியான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் எனவும் திருத்தந்தை கூறினார்.

அல்பேனியாவில் சமய சுதந்திரம் கிடைத்த பின்னர், அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே இடம் பெறும் சர்வதேச இறையியல் உரையாடலில் பலனுள்ள உரையாடலில் பங்கு கொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிதாப்பிதா அனஸ்தாஸின் இந்த அர்ப்பணம், அல்பேனியாவில் கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நல்லுறவு இடம் பெறவும், கிறிஸ்தவ சபைகள் நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்பதையும் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்








All the contents on this site are copyrighted ©.