2009-12-02 15:36:26

திருத்தந்தையின்  உரைகளடங்கிய இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை


டிச.02,2009 திருத்தந்தை 16ஆம் பெனெடிக்டின் பல்வேறு உரைகளிலிருந்து மேற்கோள்களைத் திரட்டி இத்தாலிய, ரஷ்ய மொழிகளில் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை.

கர்தினாலாகவும், திருத்தந்தையாகவும் கடந்த பத்து ஆண்டுகளாக திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் ஆற்றிய உரைகளிலிருந்து, சிறப்பாக ஐரோப்பிய கலாச்சாரம் குறித்து அவர் கூறியவைகளிலிருந்து திரட்டப்பட்ட பகுதிகள் அடங்கிய இப்புத்தகம் இப்புதனன்று ரோமையில் "ஐரோப்பிய கலாச்சார ஒன்றிணைப்பில் கிறிஸ்தவ சபைகளின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெறும்  கருத்தரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டது.

மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவின் தலைமையகம் பாப்பிரையின் கூற்றுக்களடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுவது வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெறும் ஒரு நிகழ்வு என்று கூறினார் இப்புத்தகத்தைத் தொகுத்துள்ள திரு Pierluca Azzaro.

இக்காலத்தைய கண்ணோட்டங்கள் குறித்து கத்தோலிக்கத் திருச்சபையும், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளதென்பதை இந்நூலை வெளியிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறையில் பணி புரியும் திரு Hieromonk Philip செய்தியாளர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.