2009-12-02 15:35:48

AIDS நோய் உள்ளவர்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு - இந்திய ஆயர் பேரவை தீர்மானம்


டிச.02,2009 AIDS நோய் உள்ளவர்களுக்கும் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இன்னும் அதிகமான ஆதரவும் உதவிகளும் வழங்கப்படவேண்டுமென இந்திய ஆயர் பேரவையின் நல வாழ்வுக்கான பணிக்குழு தீர்மானித்துள்ளது. டிசம்பர் முதல் தேதி அகில உலக AIDS தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இப்பணிக்குழுவின் தலைவர் பேராயர் பெர்னார்ட் மொராஸ் (Bernard Moras) இவ்வாறு கூறினார். இந்த நோய் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும், ஏழைகள், யாரும் செல்லமுடியாத இடங்களில் இந்நோயினால் வாடுகின்றவர்கள் ஆகியோருக்கு கத்தோலிக்க நலப்பணி சென்றடைய வேண்டுமெனவும் பேராயர் மொராஸ் வலியுறுத்தினார். இந்த நோய்க்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளுக்கும் பெரும் வியாபார நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் அரசின் முயற்சிகளுக்குப் பின், கத்தோலிக்கத் திருச்சபைதான் மிகப் பெரும் அளவில் இந்நோய்க்கான சேவையில் ஈடுபட்டிருப்பதாக பேராயர் கூறினார். இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் 5500 நலப் பணி நிறுவனங்கள் வழியே 18,400 பேருக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகள் தரப்பட்டு வருவதாகச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.