2009-11-30 15:21:02

புறக்கணிக்க வேண்டாமே!


நவ.30,2009 புறக்கணிக்க வேண்டாமே! இப்படிச் சொன்னதும் யாரை என்று கேட்கின்றீர்களா அன்பர்களே! வாருங்கள். சேர்ந்து பதில் தேடுவோம்.

'குப்பை'யான பேபி! என்ற தலைப்பில் கடந்த வாரத் தமிழ் இதழ் ஒன்றில் நாம் வாசித்ததைப் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். 'செங்கல்பட்டு மருத்துவமனை வாசலில் பலவீனமான நிலையில், அருகில் ஒரு துணி மூட்டையுடன் ஒரு பெண் படுத்துக் கிடந்தாள். கான்ட்ராக்ட் வேலை செய்பவர்கள், இவளைப் ஸ்டெச்சரிலிருந்து கீழே தள்ளி விட்டுப் போனார்கள். இவரோ வேறு எங்கும் போகத் தெரியாமல் இங்கேயே படுத்துக்கிடக்கிறார் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் சொல்லியுள்ளது. தமிழ் தெரியாத அந்த அபலையின் கதை என்னவெனில், 15 நாட்களுக்கு முன்பு இவளது கணவர் இவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். இவளுக்கு ஹெச்.ஐ.வி. இருப்பதாகத் தெரிய வந்தது. ''ஹெச்.ஐ.வி. உள்ள இந்தப் பெண்ணை தாம்பரத்தில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இவள் கணவர், கையில் காசு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அந்த வார்டில் உள்ளவர்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, அதை எடுத்துக்கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்.! இப்பொழுது யாரும் உடன் இல்லாததால்தான் வெளியில் கொண்டு போய் விட்டு விட்டார்கள்...''. இதை பத்திரிகை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததால் இப்பொழுது அந்தப் பெண் மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற்று வருகிறாள் என்று வாசித்து ஆறுதல் அடைந்தோம்.

அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள் யாரைப் புறக்கணிக்க வேண்டாம் என்று. இந்த எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணிக்க வேண்டாம், அவர்களும் மனிதர்களே, அவர்களை முற்சார்பு எண்ணங்களோடு நடத்த வேண்டாம் என்றெல்லாம் பல மனிதநேய ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இவ்வுலக தினம் கடைபிடிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியன்று இந்தக் குரல் ஆண்டு தோறும் ஓங்கி முழக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, பெரு நாட்டு லீமாவில் அறிக்கை வெளியிட்ட சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் இந்நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை அதிகமாகக் காண முடிகின்றது. இந்நிலை களையப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. RealAudioMP3

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானப் பலநாடுகளின் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இவ்வுலக தினத்தை நினைவுகூர்ந்த RealAudioMP3 ு, இதே அழைப்பை முன்வைத்தார்.

இந்த எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும், குறிப்பாக சிறாரையும், கடும் ஏழைகளையும், புறக்கணிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றேன். இந்த எய்ட்ஸ் நோயாளிகள், ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் ஊற்றாகிய இயேசுவின் பிரசன்னத்தை அனுபவிக்கும் பொருட்டு இவர்களுக்காக அனைவரும் செபிக்கவும் தங்களது உண்மையான அக்கறையைக் காட்டவும் வேண்டும். இந்நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த ஒத்துவைப்பு தேவை என்று திருத்தந்தை வலியுறுத்தினார். இவ்வுலக நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், இந்தப் பாகுபாடுகள் நிறுத்தப்படவேண்டும், இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் மற்றும் இவர்களுக்கு ஆதரவு வழங்கும் செயல்பாடுகள் 2010ம் ஆண்டுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரிட்டனில் எடுக்கப்பட்டு வரும் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டார். பிரிட்டனில் சுமார் எண்பதாயிரம் பேர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமாகும் HIV நோய்க் கிருமிகளுடன RealAudioMP3 ் வாழ்கின்றனர்.

இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினமானது, Universal Access and Human Rights' அதாவது “எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கவும் மனித உரிமைகளும்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப், WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், UNAIDS என்ற ஐ.நா.வின் எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதன்படி, உலகில் HIV நோய்க் கிருமிகளால் புதிதாக தாக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 17 விழுக்காடு குறைந்துள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் 15 விழுக்காடும், கிழக்கு ஆசியாவில் சுமார் 25 விழுக்காடும், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் 10 விழுக்காடும் குறைந்துள்ளன. கிழக்கு ஐரோப்பாவிலும் போதைப் பொருள் பயன்படுத்துவோர் மத்தியில் இது குறைந்துள்ளது. எய்ட்ஸ் தொடர்புடைய இறப்புகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 விழுக்காடு குறைந்துள்ளன. 1996ம் ஆண்டில் இந்நோய்க்கான சிகிச்சைகள் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து சுமார் 29 இலட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 2001ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ இரண்டு இலட்சம் சிறாரும் இக்கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்துள்ளனர்.

இது நல்ல செய்திதான். ஆனாலும் சில நாடுகளில் HIV நோய்க் கிருமிகளால் புதிதாக தாக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ஐ.நா. அமைப்புகள் கூறுகின்றன. எனினும் மொத்தத்தில் இன்று உலகில் சுமார் மூன்று கோடியே 34 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள். தென்னாப்ரிக்காவில் கர்ப்பிணி பெண்களில் 45 விழுக்காட்டினர் இக்கிருமிகளைக் கொண்டுள்ளனர் என்பது அச்சம் தருவதாகவே உள்ளது. இந்நோய்க் கிருமிகள் குறித்து 1981ம் ஆண்டில் முதன் முதலில் வெளி உலகுக்கு தெரிய வந்ததிலிருந்து இதனால் உலகில் இரண்டு கோடியே ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந்த எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய் பற்றியும் கொஞ்சம் அறிவோமா! HIV ஹெச்ஐவி என்ற கிருமியே எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும். இந்த கிருமி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் கிருமியாகும். எச்ஐவி கிருமி நமது உடலுக்குள் வந்ததும், அது இனப்பெருக்கம் அடைந்து உடல் முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கிறது. பின்னர் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. இந்த நிலையைத்தான் எய்ட்ஸ் நோய் என்கிறார்கள். பொதுவாக ஹெச்ஐவி கிருமி மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும்கூட, இரத்தம், விந்து, பெண்ணுருப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்தம் செய்யப்படாத ஊசியைப் பயன்படுத்துதல், அறுவை சிகிச்சையின் போது சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பற்ற இரத்த பரிமாற்றம், பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் ஆகிய நான்கு வழிகளில் இது ஒருவரைத் தொற்றிக் கொள்கிறது.

மனிதனின் சுயக்கட்டுபாடின்மை, அறநெறி தவறிய வாழ்வு, கவனமின்மை போன்றவற்றால் தொற்றும் இந்நோயால் அப்பாவிகளும் சிறாரும் பாதிக்கப்படுவது கவலை தருவதாக உள்ளது. இவர்கள் சமுதாயத்தால் வித்தியாசமாக அச்சத்துடன் நோக்கப்படுவதைப் பரவலாகக் காண முடிகின்றது. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாகவே இந்நோயாளிகள் பலரும் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். புறக்கணிக்கப்பு வேண்டாமே என்று இன்றைய நிகழ்ச்சிக்குத் தலைப்பிட இதுவே காரணமாகும்.

HIV positive அதாவது எய்ட்ஸ் நோய் இருக்கின்றது என்று மருத்துவ பரிசோதனை தெரிவித்தவுடன் தற்கொலை செய்வது அல்லது தனிமையில் முடங்கிப் போவது என்ற நிலை தற்போது மாறி விட்டது. இந்நோயாளிகள் இப்பொழுதெல்லாம் துணிச்சலுடன் தங்களின் நோயை, நோய்க்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வருகிறார்கள். உயிரோடு வாழும் குறுகிய காலத்தில் மகிழ்ச்சியோடு வாழ விரும்புகிறார்கள், அவர்களுக்கு அடைக்கலம் தரும் பிறரன்பு கருணை நிறுவனங்களும் இதற்கு ஒரு காரணம். ஏறத்தாழ ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு சமூகத்தையும் ஒவ்வொரு பணியிடத்தையும் ஒவ்வொரு நிறுவனத்தையும் இந்நோய்த் தொட்டு விட்டதாகச் சொல்லப்படும் தென்னாப்ரிக்காவில், தேம்பி Tembi, என்ற பெண் தனது 16வது வயதில் எய்ட்ஸ் நோயைப் பெற்றதாகவும், வாழும் சொற்ப நாட்களை மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும் இதனை இந்தியாவில் வந்து பகிர்ந்து கொள்ள விரும்புவதாகச் சொல்லி அதனை இந்தியாவில் பகிரவும் செய்துள்ளார். RealAudioMP3

அன்பர்களே, HIV positive நோயாளிகளே இப்படி தைரியமுடன் இருக்கும் போது அவர்களைச் சுற்றி வாழும் மற்றவர்கள் எப்படி அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்திப்பது நல்லது. உலகில் மிகப் பெரிய தண்டனை எது என்று கேட்டால் அது புறக்கணிப்பு என்றுதான் சொல்வேன். அதைப் போல வலி தருவது வேறு எதுவுமில்லை. தன்னைக் கண்டு கொள்ளாத தாயைப், பார்த்து பார்த்துக் கதறும் குழந்தை, தீடிரென கண்டு கொள்ளாமல் விடும் நண்பன், ஊழியனைக் கண்டு கொள்ளாத எஜமான் இப்படி பல. சர்வதேச செஞ்சிலுவை சங்க அமைப்புக்கு வித்திட்டவரான Jean Henry Dunant ம் இப்படித்தானே புறக்கணிக்கப்பட்டு பல ஆண்டுகள் நாடு நாடாய் அலைந்து அடையாளம் தெரியாமல் இறுதியில் ஓர் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த போது அடையாளம் காணப்பட்டார்.

'Stone reader' என்ற ஓர் ஆவணப் படமும் இந்தப் புறக்கணிப்பை நன்றாகவே விளக்குகிறது. அதில் டவ் மோஸ்மென் Dow Mossman என்ற எழுத்தாளர், குடிகாரராக, மனச்சோர்வுற்று முதுமையில் தனிமையில் வாழ்ந்ததற்கான காரணம் புறக்கணிப்பு என்று புரிகிறது. அந்த The Stone of Summer என்ற உன்னத நாவலை எழுதியவருக்கா இந்நிலை என்ற பல கேள்விகளை எழும்புகின்றன. ஏன்,

நாம் காரணம் இல்லாமல் ஏன் ஒன்றைப் புறக்கணிக்கிறோம்? நமது புத்தக அலமாரியில் உள்ள படிக்கப்படாத புத்தகத்தில் ஒன்று நம் சிந்தனையை மாற்றி விடக்கூடியது என்பதை எதற்காக மறந்துபோகிறோம்? பாராட்டும், அங்கீகாரமும், தொடர்ந்த அரவணைப்பும் இல்லாத எவரும் ஒடுங்கிப் போய்விடுவார் என்ற உண்மையை ஏன் நாம் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்? ஒரு சிலர், சிறு சிறு செயல்களை மிக அற்புதமாகச் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரபலமானவர்களாக இல்லாததால் சமூகத்தால் கண்டு கொள்ளப்படாமலே வாழ்வை முடித்து விடுகிறார்கள். அப்படியே ஒடுங்கிப் போய் விடுகிறார்கள். காலம் இத்தகையோரை எப்போதுமே புறக்கணிப்பின் பிடிக்குள்ளாகவே வைத்திருக்கிறது.

அன்பர்களே, கவனமின்மையும் புறக்கணிப்பும் இரண்டும் சகோதரர்கள் போல், இரண்டும் ஒன்றாகவே வருகின்றன அல்லது ஒருவர் வந்தவுடன் மற்றவர் இணைந்து கொண்டு விடுகிறார். இந்நிலை என்வாழ்வில் ஏற்பட்டால் நான் என்ன செய்வேன் என்பதை யோசித்து பிறரை, சிறப்பாக எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணியாதிருப்போமா.

இந்த எய்ட்ஸ் நோயாளிகள் நம் செவிகளில் சொல்வது கேட்கின்றதா -“எங்களுக்கு வந்த ஹெச்.ஐ.வி. இனி யாருக்கும் வரக் கூடாது. எங்களைப் புறக்கணிக்க வேண்டாம். ஆதரவு மருந்து மட்டுமே போதும்” என்று.








All the contents on this site are copyrighted ©.