2009-11-30 15:42:55

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் நம்பிக்கையின் ஆதாரமாக இருப்பவர் இயேசு கிறிஸ்துவே - திருத்தந்தை


நவ.30,2009 ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் நம்பிக்கையின் ஆதாரமாக இருப்பவர் இயேசு கிறிஸ்துவே என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள திருவருகை காலத்தின் பொருள் பற்றி, வத்திக்கான தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கும் சமய நம்பிக்கையாளருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மாந்தருக்கும் உரியவர், ஏனெனில் அவர் விசுவாசத்தின் மையம் மற்றும் நம்பிக்கையின் அடித்தளம் என்று கூறினார்.

மனித குலத்திற்கு திருவழிபாட்டு ஆண்டு எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதை அவர் விளக்கிய போது, இன்றைய உலகத்திற்கு,, எல்லாவற்றிக்கும் மேலாக நம்பிக்கை தேவைப்படுகின்றது, இது வளர்ந்து வரும் மக்களில், சிறப்பாக வளர்ந்த மக்களில் உண்மையாக இருக்கின்றது என்றார்.

நாம் ஒரே படகில் இருக்கிறோம், நம்மையே நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற உணர்வானது அதிகரித்து வருகிறது, பல தவறான உறுதிகள் நிலைகுலைந்துள்ள சூழலில், ஓர் உறுதியான நம்பிக்கை எவ்வளவு தேவை என்பதை உணரத் தொடங்கியுள்ளோம், இந்த நம்பிக்கையை கிறிஸ்துவில் மட்டுமே காண முடியும் என்று கூறினார் திருத்தந்தை.

எபிரேயருக்கு எழுதப்பட்ட கடித்ததில் சொல்லப்பட்டுள்ளது போல, “இயேசுவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” (13:8) என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவர் இயேசு கடந்த காலத்தில் வந்தார், நிகழ் காலத்தில் வருகிறார், வருங்காலத்தில் வருவார், இவர் காலத்தின் எல்லாக் கூறுகளையும் தழுவிக் கொள்கிறார், இவர் இறந்து உயிர்த்ததால் அவர் வாழ்கின்றவர், நமது மனிதக் கவலைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்து கொள்கிறார், அதேசமயம் நம்மைக் கடவுளுக்கு காணிக்கையாக்க அவர் எப்பொழுதும் இருக்கிறார், அவர் நம்மைப் போல் “சதையை”க் கொண்டவர், கடவுளைப் போல் “பாறையானவர்” என்றார்.

சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்காக ஏங்கும் எவரும் தலையை உயர்த்தி நிமிர்ந்து நிற்கலாம், ஏனெனில் கிறிஸ்துவில் மீட்பு (cf Lk, 21:28) இருக்கின்றது, இதுவே இன்றைய நற்செய்தி வாசகமும் சொல்கின்றது என்று ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.