2009-11-30 15:44:02

எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் திருத்தந்தை செபம்


நவ.30,2009 ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, டிசம்பர் முதல் தேதி இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்படும் “உலக எய்ட்ஸ் நோய் தினம்” பற்றியும் பேசினார்.

இந்நாளில் இந்நோயால் தாக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும், குறிப்பாக சிறாரையும், கடும் ஏழைகளையும், புறக்கணிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறினார் திருத்தந்தை.

எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்த எய்ட்ஸ் நோயாளிகள், ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் ஊற்றாகிய ஆண்டவரின் பிரசன்னத்தை அனுபவிக்கும் பொருட்டு இவர்களுக்காக அனைவரும் செபிக்கவும் தங்களது உண்மையான அக்கறையைக் காட்டவும் வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

நாம் அனைவரும் அதிகமான ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த நோயை ஒழிக்கவும் இது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்ற தனது நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

மேலும், திருத்தந்தை வத்திக்கான தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளைப் பல மொழிகளில் வாழ்த்திய போது, “குடும்ப அன்பு இயக்கம்” நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருச்சிலுவையின் ஆன்மீக, வரலாற்று மற்றும் கலாச்சார விழுமியங்களை ஏற்று அதன் மீது தாங்கள் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இப்பேரணி இடம் பெற்றதையும் அவர் குறிப்பிட்டார்.

இத்தாலியில் பொது இடங்களில் திருச்சிலுவையை அகற்ற வேண்டுமென்ற ஐரோப்பிய நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வூர்வலம் நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.