2009-11-28 14:44:53

அமைதியைக் கட்டி எழுப்ப வாழ்வுக் கலாச்சாரமும் நிலையான குடும்பங்களும் காக்கப்படுவது அவசியம், திருத்தந்தை


நவ.28,2009 அர்ஜென்டினா, சிலே ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு இவ்விரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்டை தனித்தனியே சந்தித்து உரையாடினர்.

Beagle கால்வாய் மற்றும் பெரும்பாலும் மனிதர் வாழாத மூன்று தீவுகள் குறித்து இவ்விரு அண்டை நாடுகளுக்கிடையே இடம் பெறவிருந்த முழுவீச்சான போர் வத்திக்கானின் தலையீட்டால் நிறுத்தப்பட்டு அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகியதைக் கொண்டாடும் விதமாக இச்சனிக்கிழமை இச்சந்திப்பு நடை பெற்றது.

அர்ஜென்டினா குடியரசுத் தலைவர் Cristina Fernández de Kirchner ஐ முதலில் சந்தித்த திருத்தந்தை, அதன் பின்னர் சிலே குடியரசுத் தலைவர் Michelle Bachelet ஐயும் சந்தித்தார்.

இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் இவ்விரு அண்டை நாடுகளின் திருச்சபை உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழுக்களுக்கு வத்திக்கான் கிளமென்த்தினா அறையில் உரை நிகழ்த்திய திருத்தந்தை, 25 வருடங்களுக்கு இடம் பெற்ற இந்நிகழ்வு, இவ்விரு நாடுகளுக்கிடையே சகோதரத்துவ உணர்வையும், தீவிரமான ஒத்துழைப்பையும் கலாச்சாரப் பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது என்றார்.

அமைதியினால் எதையும் இழப்பதில்லை, ஆனால் போரினால் எல்லாமே இழக்கப்படுகின்றது என்றுரைத்த பாப்பிறை 12ம் பத்திநாதரின் கூற்றைக் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் அனைத்து தரப்பினரின் நியாயமான மற்றும் சட்டரீதியான நலன்களைக் கருத்தில் கொண்டு, பொறுமையுடன் கூடிய பேச்சுவார்த்தை, தேவையான அர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் நேர்மையான உரையாடலை மேற்கொண்டு ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு ஆவல் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், சமூகத்தின் அடிப்படைக் கூறாக இருக்கும் குடும்பம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மனித மாண்பை அதன் நிறைவான தன்மையில் மதிக்கும் வாழ்வுக் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வறுமை, ஊழல், வன்முறை தவறகாகப் பயன்படுத்தல் ஆகியவை ஒழிக்கப்படுதல், எல்லாருக்கும் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு போன்றவையும் அமைதியை கட்டி எழுப்புவதற்கு இன்றியமையாதது என்று கூறினார் அவர்.

அர்ஜென்டினா மற்றும் சிலே நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து அமைதியிலும் நட்பிலும் வாழுமாறும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வு, முற்சார்பு எண்ணங்களையும் சந்தேகங்களையும் மேற்கொள்ள உதவியிருக்கின்றது, பல பொருளாதார திட்டங்களில் தெளிவையும் ஏற்படுத்தி, பெரிய அளவில் நாடுகளின் உள்கட்டமைப்புக்கும் இது உதவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மிகப்பெரிய கத்தோலிக்க மரபுகளைக் கொண்ட அர்ஜென்டினா, சிலே ஆகிய இந்த வெள்ளி விழா கொண்டாட்டம், அர்ஜென்டினா மற்றும் சிலே நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு இலத்தீன் அமெரிக்காவுக்கே விழாவாகும் என்றும் திருத்தந்தை கூறினார்







All the contents on this site are copyrighted ©.