2009-11-27 15:21:45

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்ற முதலாம் ஆண்டை கொல்கத்தாவில் பல்சமய மாணவர்கள் நினைவுகூர்ந்தனர்


நவ.27,2009 மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்ற முதலாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, இவ்வியாழனன்று கொல்கத்தாவில் இயேசு சபையினரின் வழிநடத்துதலில் சுமார் 200, பல்சமய மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

கொல்கத்தாவில் இயேசு சபையினர் நடத்தும் LTS என்ற தலைமைத்துவ பயிற்சி சேவையைச் சேர்ந்த பல்சமய மாணவ மாணவியரும், அன்னை தெரேசா சபையின் 4 சகோதரிகளும் இதில் கலந்து கொண்டு, இந்தியாவில் வன்முறையும் வெறுப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதற்கு குரல் கொடுத்தனர்.

இந்த அமைதி ஊர்வலம் பற்றிப் பேசிய, இயேசு சபையினரின் LTS அமைப்பின் தேசிய ஊக்குனர் அருட்தந்தை ஜெனித் வில்லியம், இந்த அமைப்பானது பல மதத்தவரிடையே பகிர்ந்து கொள்ளுதலையும் புரிந்து கொள்ளுதலையும் ஊக்குவிக்கின்றது என்று கூறினார்.

இந்த தேசிய அமைப்பிலுள்ள 15 ஆயிரம் பலசமய மாணவ மாணவியரில் சுமார் 50 விழுக்காட்டினர் இந்துக்கள் மற்றும் 30 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் என்றும் அக்குரு கூறினார்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையின் இரண்டு முக்கிய நட்சத்திர ஹோட்டல்கள், சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், யூதமத மையம் உட்பட மாநகரத்தின் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்றன. 170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.








All the contents on this site are copyrighted ©.