2009-11-26 15:38:49

பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானியர்களே பைசலாபாத் ஆயர்


நவ.26,2009 பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானியர்களே அன்றி, மேலைநாட்டு கலாச்சாரத்தின் பிம்பங்களல்ல என்று பைசலாபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ் (Joseph Coutts) கூறியுள்ளார். பாகிஸ்தானில் அண்மையில் நிலவி வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்களால் கிறிஸ்தவர்கள் பலவித இன்னல்களுக்கும் ஆளாகி வருவதைச் சுட்டிக் காட்டி செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் கூட்ஸ், தாங்கள் பாகிஸ்தானியர்கள் என்பதை நிரூபிப்பது பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதெனக் கூறினார். பாகிஸ்தானை உருவாக்கிய முஹம்மது அலி ஜின்னா, மதமும் அரசியலும் கலக்கக்கூடாதேனக் கூறியதை எடுத்துக்கூறிய ஆயர் கூட்ஸ், பாகிஸ்தானின் தந்தையெனப் போற்றப்படும் ஜின்னாவின் கருத்துக்களுக்கு எதிராக அடிப்படைவாத இஸ்லாமியரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வேதனை தருகிறதேனக் கூறினார். கிறிஸ்தவம் அந்தந்த நாட்டில் வேரூன்றும் வண்ணம் கலாச்சாரமயமாக்கும் பணிகளில் ஆசிய ஆயர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஈடுபட்டதைச் சுட்டிக் காட்டிய ஆயர், கிறிஸ்துவத்தை மேலை நாட்டு வெளிப்பாடாக மட்டுமே பார்க்கும் பார்வை மிகக் குறுகிய பார்வை என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.