2009-11-25 15:04:11

பெண்களுக்கு எதிராக இடம் பெறும் பாகுபாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


நவ.25,2009 பெண்களுக்கு எதிராக இடம் பெறும் பாகுபாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் Ban Ki-moon
இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான், தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமய மற்றும் பொதுநலவாதிகள் ஆகியோரை ஒன்று திரட்டி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சர்வதேச தினம் அனுசரிக்க ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டில் பத்து ஆண்டுகள் நிறைவுறும்வேளை, உலக அளவில் இடம் பெறும் இவ்வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் இப்புதிய முயற்சியை எடுத்துள்ளதாகவும் அவரின் செய்தி கூறுகிறது.
உலகில் சுமார் 70 விழுக்காட்டுப் பெண்கள், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒருவகையில் உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ ஆண்களிடமிருந்து, பெரும்பாலும் கணவன்கள், நெருங்கிய தோழர்கள் அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.
பெண்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளை தடுப்பதற்கு நீதிபதிகள், தேசியத் தலைவர்கள் போன்ற ஆண்கள் ஏற்கனவே முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.18 நாடுகளில் ஏற்கனவே இடம் பெற்று வரும் இந்த வன்முறை ஒழிப்புச் நடவடிக்கைகளுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் டாலர் நிதி உதவி செய்வதற்கு ஐ.நா.தீர்மானித்திருப்பதாகவும் அவரின் செய்தி தெரிவித்தது.







All the contents on this site are copyrighted ©.