2009-11-24 16:22:07

நவம்பர் 25. - அலேக்ஸான்றியாவின் புனித கத்தரீன்


அலெகஸானட்றியாவில் பிரபுக் குடும்பத்தில் பிறந்த கத்தரீன், சிறுவயது முதல் அபூர்வமான அறிவுத்திறன் பெற்றிருந்தார். அன்னை மரியா இவருக்கு காட்சி அளித்ததால், கிறிஸ்துவத்திற்கு மனம் மாறிய கத்தரீன், மாக்ஸென்சியுஸ் என்ற ரோமையப் பேரரசன் கிறிஸ்தவர்களை வதைத்ததை எதிர்த்து குரல் கொடுத்தார். இவரை நேரடியாக எதிர்க்கத் துணியாத பேரரசன், அறிவில் சிறந்த 50 தத்துவ இயல் அறிஞர்களுடன் கத்தரீனை வாதிடுமாறு பணித்தான். கத்தரீனின் வாதத் திறமையால், அந்த அறிஞர்கள் அனைவரும் தோற்றனர். அனைவரையும் உயிரோடு எரித்துக் கொன்றான் பேரரசன் மாக்சென்சியுஸ். கத்தரீன் சிறையிலடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். சிறையில் இருக்கும் போது, சிறைக் காவலர்களையும், பேரரசனின் மனைவி ஃபவுஸ்தினாவையும் மனமாற்றினார். இதனால் கத்தரீன் பல்வேறு சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். இவரது இறந்த உடலை வானதூதர்கள் ஏந்திச் சென்று சீயோன் மலை மீது கிடத்தியதாகவும், அங்கு கி.பி. 800ஆம் ஆண்டளவில் இவரது உடல் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.