2009-11-23 16:30:17

மனசாட்சியின் பிரார்த்தனை


நவ.23,2009 அன்பர்களே, நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம். கடந்த வெள்ளியன்று கடைபிடிக்கப்பட்ட இந்த உலக குழந்தைகள் தினத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததன் இருபதாம் ஆண்டு அந்நாளில் நினைவுகூரப்பட்டது. தற்சமயம் இந்த ஒப்பந்தத்தை 193 நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. அத்தினத்தை முன்னிட்டு ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெஃப் வெளியிட்ட அறிக்கையை நாம் வாசித்த போது மனது கொஞ்சம் கனத்தது. உலகத்திலேயே உடல் வளர்ச்சியில் குறைந்த குழந்தைகள் மிக அதிகமான அளவில் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதே அதற்கான காரணம். உலகில் வளர்ச்சி குறைந்த குழந்தைகளில் 80 விழுக்காட்டு குழந்தைகள் உலகின் 24 நாடுகளில்தான் உள்ளனர். இவற்றில் மிக மோசமாக வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட 18 நாடுகளில் இந்தியா 12-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. குழந்தைகளின் குறைவளர்ச்சி என்பது, அந்தக் குழந்தைகளின் நலனை மட்டுமே பாதிக்கிற விடயமல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்து, சமூக வளர்ச்சியையும் தடை செய்கிறது என்பதே உண்மை.

உடல் வளர்ச்சி குறைவு, உடல் ஊனம் என்று நாம் பேசுகிறோம். இந்த உடல் ஊனத்தை, கை கால் வளர்ச்சிக்குறைவு, பார்வைத்திறன், செவித்திறன், பேச்சுத்திறன் குறைவு, மனவளர்ச்சி குன்றிய நிலை என்றவாரெல்லாம் வகைப்படுத்துகிறோம். கடந்த சனிக்கிழமை, வத்திக்கானில் செவித்திறன் குறைந்தோர் பற்றிய மூன்று நாள் பன்னாட்டு மாநாடு ஒன்று நடந்து முடிந்தது. அதில் 65 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய, திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் பேராயர் சிக்மன்ட் சிமோஸ்கி, உலகில் 27 கோடியே 80 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் செவித்திறன் குறைந்தோர்; ஆறு கோடிப்பேர் செவித்திறனற்றவர்கள்; இவர்களில் 80 விழுக்காட்டினர் குறைந்த மற்றும் சாதாரண வருவாயுள்ள நாடுகளில் வாழ்கின்றனர்; உலகில் சுமார் 13 இலட்சம் கத்தோலிக்கர் காது கேளாதவர்கள் என்று அறிவித்தார். இந்தியாவில் 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஊனமுற்றவர்கள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.13 விழுக்காடாகும். இவர்களில் 75 விழுக்காட்டினர் கிராமங்களில் வாழ்கின்றனர். 49 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவர்கள். சுமார் ஆறு கோடிப் பேர் செவித்திறன் குறைந்தோர். நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பார்வைத்திறனும் செவித்திறனும் குறைந்தோர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில்கூட ஏறத்தாழ 2 கோடியே 80 இலட்சம் பேருக்கு செவித்திறன் குறைவு என்று, செவித்திறனற்றவர்க்கான அந்நாட்டு தேசிய நிறுவனம் அறிவித்தது. அந்நாட்டில் ஒவ்வோர் ஆயிரம் குழந்தைகளுக்கு 2 முதல் 3 வரை காது கேளாமல் அல்லது சரியாகக் கேட்காத குறையுடன் பிறக்கின்றன. பிறவியிலேயே காது கேளாமல் பிறக்கும் பத்துக்கு ஒன்பது குழந்தைகள் நன்றாகச் செவித்திறனுடைய பெற்றோருக்குப் பிறப்பவர்கள். 18 வயதுக்குட்பட்ட சிறாரில் ஆயிரம் பேருக்கு 17 பேர் வீதம் இக்குறையுடையவர்கள் என்று அந்நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது. சமூகங்களில் இவர்கள் எதிர் நோக்கும் பாகுபாடுகளைக் கண்முன் கொண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்டும், அரசு மற்றும் அரசியல் அதிகாரிகளும் சர்வதேச நிறுவனங்களும் இவர்களின் நல்வாழ்க்கையில் அக்கறை காட்டுமாறு அழைப்பு விடுத்தார். இந்தக் குறைபாடு, எளிதாகத் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்கள் காரணமாக பல நேரங்களில் ஏற்படுகிறது. நாடுகளில், குறிப்பாக, வளரும் நாடுகளில் இவர்களின் நிலைமை மோசமாக இருக்கின்றது என்பதைக் கவலையுடன் கூறினார்.

RealAudioMP3 சாதாரணமாக, செவித்திறன் குறைந்தவர்களைப் பார்த்த நேரத்திலே எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை. பேருந்துகளில் பயணம் செய்யும் போதுகூட அவர்கள் பேசும் சைகை மொழியை வைத்துத்தான் பலநேரங்களில் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அமைதியாக இருந்தால் அவர்களின் குறை எளிதில் வெளியே தெரிவதில்லை. எனவேதான் பேராயர் சிமோஸ்கி இந்தக் குறையை, “காணமுடியாத ஊனம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறைபாட்டிற்கு காரணம் என்ன என்று, திருச்சி பொன்மலைப்பட்டியில் செர்வைட் காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் இருபது ஆண்டுகளாகப் பணியாற்றும் அருட்சகோதரி கிளாடிஸைக் கேட்டோம்.

RealAudioMP3 அன்பர்களே, செவித்திறன் குறைந்தவர்கள் பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும் அதற்கு மத்தியிலும் அவர்கள் சிகரங்களைத் தொட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்து வருகிறோம். அதேசமயம் உடலளவில் அங்கத்தில் குறையின்றி இருப்பவர்களில் பலர் உச்சிகளை உதைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து கண் கலங்குகிறோம். “ஏம்மா.. உன் உடம்புல ஒண்ணும் குறை இல்லை, மனதுலதாமா ஊனம் இருக்கு” என்ற வசை மொழிகளைக் கேட்டு வருகிறோம். இந்த வகையான குறைபாடு கொண்டவர்களை, இயேசுவும் “நீங்கள், கண்ணிருந்தும் காண்பதில்லை, காதிருந்தும் கேட்பதில்லை; கேட்டும் உணராதவர்கள், உங்கள் இதயம் மழுங்கிவிட்டது; நீங்கள் மந்தப் புத்தி உள்ளவர்கள்” போன்ற சொற்களால் சாடியிருக்கின்றார். இத்தகையோரை ஆன்மீகச் செவிடர்கள் என்று சொல்கிறார்கள். மனித சமுதாயம் இந்த ஆன்மீகச் செவிட்டுத்தன்மையிலிருந்து குணப்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தையும், கடந்த வெள்ளியன்று அழைப்புவிடுத்தார். தன்னலம் என்ற கூண்டுக்குள் தங்களையே முடக்கிக் கொண்டவர்கள், கடவுளின் குரலுக்குத் தடைச் சுவர் எழுப்புகிறவர்கள், அருகில் வாழ்வோரின் அழுகுரலுக்குக் காதுகளை அடைத்துக் கொள்பவர்கள், இத்தகையோர் இந்தத் தங்களின் ஆன்மீகச் செவிட்டுத்தன்மையிலிருந்து குணம் பெற வேண்டும் என்றார். ஆம். இவர்கள் ஆன்மீக அறியாமை என்ற இருளிலிருந்து RealAudioMP3 வெளிவர வேண்டும்.

அன்பர்களே, நம்மில் பெரும்பாலானவர்களை நல்ல செவித்திறனோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? “அய்யோ! நான் சொல்றதைக் காது கொடுத்து கேட்க மாட்டீங்கிறாங்களே” என்று உங்கள் வீட்டுக் குழந்தைகளோ அல்லது நீங்களோகூட புலம்பியிருக்கலாம். குடும்பங்களில் ஒருவர் மற்றவரோடு, தங்கள் ஆசைகளை, எண்ணங்களை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள துடிக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து திரும்பும் அப்பா, பள்ளியிலிருந்து வரும் பிள்ளை என ஒவ்வொருவரும் மற்றவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் கேட்பதற்கு பலருக்கு நேரமிருப்பதில்லை. நமது நேரத்தைத் தொலைகாட்சி என்ற பெயரில் தொல்லைக் காட்சி பெட்டிகளும் இன்டெர்னெட்டும் அபகரித்து விடுகின்றன. இதனாலே உறவுகளில் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

இதில் உண்மை என்னவெனில் நமது மனக்கதவு பிறருக்கான நேரத்திற்குப் பூட்டப்பட்டிருப்பதால் பிறரைச் சமாளிப்பதற்கும், பிறரோடு ஒத்துப் போவதற்கும் அது தடையாக இருக்கிறது. பூட்டப்பட்ட ஓரிடத்தில் நுழைவது எப்போதுமே கடினம்தான். அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சொன்னது போல, “மிகச் சிலரே கேட்கிறார்கள்”. அவர் இந்தத் தனது கருத்தை ஒரு விருந்தில் பரிசோதித்தும் பார்த்தாராம். அவ்விருந்தில் அவரோடு பேச வந்தவர்களிடம், “நான் இன்று காலை எனது பாட்டியைக் கொன்று விட்டேன்” என்றாராம். அதற்கு அவர்கள், “எவ்வளவு அற்புதமானது, தொடர்ந்து இந்நல்ல காரியத்தைச் செய்யுங்கள்” என்றார்களாம். ஒரேயொரு அரசியல்வாதி மட்டும் கண்சிமிட்டிக் கொண்டே நகைச்சுவையாகக் கூறினாராம் – “இது அவளாகச் செய்து கொண்டது என நம்புகிறேன்” என்று.

ஆம். நாம் நமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் நம்மை இழந்து விடுவதால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு நேரமோ அல்லது விருப்பமோ இருப்பதில்லை. உளவியலாரின் கூற்றுப்படி, நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 125 முதல் 150 வார்த்தைகளைப் பேசுகிறோம். அதேசமயம் மனத்தால் நிமிடத்திற்கு 500 சொற்களைக் கையாள முடியும். ஒருவர் நம்மிடம் பேசும் போது, காதால் வார்த்தைகளை உள்வாங்குகிறோம். இதயத்தால் பேச்சாளருக்கு இடம் தருகிறோம். மூளையால் அவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். இதைச் சரியாகச் செய்யும் போது பதில் வார்த்தைகளை மட்டுமல்லாமல் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறோம். அப்போது இறுக்க சூழ்நிலை விலகும். புரிந்துணர்வு உருவாகும். உறவுகள் பலப்படும். வோல்டர் என்பவரும், “இதயத்திற்கான பாதை காதுகள்தாம்” என்று சொல்லியிருக்கிறார்.

இன்று நாம் வாழும் சூழல் சப்தங்கள் நிறைந்ததாக இருக்கிறது. சாலையில் சென்றால் வாகனங்களின் இறைச்சல், வாகனங்களில் பாடல்களின் அலறல், தெருச் சண்டை, குழாயடிச் சண்டை என சப்தம். அலுவலகத்துக்கு வந்தால் கனணியில் சப்தம், மின்விசிறியில் சப்தம். சரி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குளிர்சாதன பெட்டியில், மிக்சியில், க்ரைண்டரில் சப்தம். இந்த சப்தங்கள் போதும், ஓய்வெடுப்போம் என்றால் அறையில் தொலைக்காட்சி பெட்டி சப்தம், இசைச் சப்தம், செல்லிடை பேசி சப்தம். அடுக்குமாடி கட்டிடங்களில் மேல்வீடு கீழ்வீடு சப்தம், படிகளில் ஏறுவோர் சப்தம், செல்லப் பிராணிகள் சப்தம். இவற்றையும் தாண்டி நாம் பேச வேண்டுமேன்றால் குரலை உயர்த்திக் கத்த வேண்டியிருக்கிறது. ஆதலால் ஒரு சப்தத்திலிருந்து தப்பிக்க இன்னொரு சப்தத்தில் நுழைய வேண்டியிருக்கிறது. ஆனால் அன்பர்களே, நாம் கேட்கும் இந்த இயந்திர சப்தங்களையெல்லாம்விட நமது மனதுக்குள்ளே, வெளி உலகுக்கு கேட்காதபடி நமக்கு மட்டுமே கேட்கும் ஒரு சப்தம் அலறிக் கொண்டே இருக்கிறது. அது என்ன தெரியுமா? நான் எனது மனக்கட்டுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும், எனது ஆன்மீகச் செவிட்டுத் தன்மையிலிருந்து குணம் பெற வேண்டுமென்ற மனசாட்சியின் பிரார்த்தனை. இதுவே நம் பிரார்த்தனையாகவும் இருக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.