2009-11-23 16:32:12

கிறிஸ்து, அன்பினால் ஆளும் அரசர்


நவ.23,2009 கிறிஸ்து, அன்பினால் ஆளும் அரசர், இவர் தன்னை எவரிலும் திணிக்கமாட்டார், மாறாக, மனித சுதந்திரத்தை மதிப்பவர் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுடன் சேர்ந்து மூவேளை செபம் செய்யுமுன்னர் உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்து அரசர் பெருவிழா பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிறிஸ்துவின் அரசாட்சி, இவ்வுலகின் ஆட்சியாளர்கள் போன்றதல்ல, மாறாக, அது தீமையையும் மரணத்தையும் தோற்கடிக்கும் வல்லமையைக் கொண்டது, கடின மனங்களிலும்கூட நம்பிக்கையை எழுப்புவது என்றும் திருத்தந்தை கூறினார்.
திருவருகைக்காலம் தொடங்குவதற்கு முன்னான இந்த கடைசி ஞாயிறன்று திருத்தந்தை விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் வல்லமை பற்றி எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவின் வல்லமை, நித்திய வாழ்வை வழங்கும் இறைசக்தி என்றும், அது தீமையிலிருந்து விடுதலை தருகிறது, மரணத்தின் ஆட்சியை மேற்கொள்ளச் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இயேசுவுக்குக் கொடுக்கப்படும் அரசர் என்ற பெயர் நற்செய்திகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இது, அவர் பற்றியும் அவரது மீட்புப்பணி பற்றியும் முழுவதுமாக வாசிப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துவைத் தேர்ந்து கொள்வது, இவ்வுலக போக்கின்படி வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல, ஆனால் அது, அவர் மட்டுமே தரவல்ல அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் உறுதியளிக்கின்றது என்று கூறினார் அவர்.
கிறிஸ்துவின் பெயரால், உண்மையின் மற்றும் நீதியின் பெயரால் ஒவ்வொரு காலத்திலும் வாழ்நத இருபாலாரின் அனுபவங்களில் இதனைத் தெரிந்து கொள்கிறோம் என்று மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.