2009-11-21 16:49:35

கலைஞர்கள், உலகில் அழகின் பாதுகாவலர்கள், திருத்தந்தை


நவ.21,2009 அழகின் பாதுகாவலர்களாகிய கலைஞர்கள், அந்த அழகை, அழகின் வழியாகவும் அழகிலும் வெளிப்படுத்துவதற்குத் தாங்கள் கொண்டுள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுமாறு இச்சனிக்கிழமை உலகக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஓவியம், சிற்பம், இசை, இயல், நாடகம் எனப் பல கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியா உள்ளிட்ட 260 பன்னாட்டுப் கலைஞர்களை இச்சனிக்கிழமை வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கலை உலகோடு கத்தோலிக்கத் திருச்சபை கொண்டுள்ள நட்பைப் புதுப்பிப்பதாக இச்சந்திப்பு இருக்கின்றது என்றார்.

கலைஞர்கள், உலகில் அழகின் பாதுகாவலர்கள் என்றுரைத்த அவர், அழகின் மேன்மையையும் அதை மனித சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதில் கலைஞர்கள் கொண்டுள்ள பொறுப்பையும் கோடிட்டுக் காட்டினார்.

கலைஞர்கள், தங்களின் கலைகள் வழியாக மானுடத்திற்கு நம்பிக்கையின் சான்றுகளாகவும் அதனை அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

துரதிஷ்டவசமாக, இப்போதைய உலகப் போக்குகள், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் எதிர்மறைக் கூறுகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மனித உறவுகளில் நம்பிக்கையையும் பலவீனப்படுத்துகின்றன, இந்நிலை மனச்சோர்வையும் பகைமை உணர்வையும் அதிகரிக்கின்றன என்று அவர் கூறினார்.

எனினும் அழகானது, நம் அன்றாட வாழ்க்கையின் நிஜத்தைச் சந்திக்க வைக்கின்றது, இருளிலிருந்து நம்மை விடுதலை செய்கின்றது, நம்மை உருமாற்றுகின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

திருச்சபைக்கு கலைஞர்கள் தேவை, ஆனால் கலைஞர்களுக்குத் திருச்சபை தேவைப்படுகின்றதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இந்த சிஸ்டீன் ஆலயத்தில் வரையப்பட்டுள்ள உலகப் புகழ் பெற்ற மிக்கேல் ஆஞ்சலோ போனோரோத்தியின் Michelangelo Buonarroti இறுதி தீர்ப்பு மற்றும்பிற ஓவியங்கள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, பாப்பிறைத் தேர்வு இவ்விடத்தில் நடைபெறுவதையும் குறிப்பிட்டார்.

உலக கலைஞர்களுடனான இந்த சந்திப்பு இடம் பெறுவதன் நோக்க பற்றியும் குறிப்பிட்ட அவர், பாப்பிறை ஆறாம் பவுல் 45 ஆண்டுகளுக்கு முன்னர் உலக கலைஞர்களை இவ்விடத்தில் சந்தித்து உரையாற்றியது, இரண்டாயிரமாம் ஆண்டில் பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் உலக கலைஞர்களுக்கு எழுதிய கடிதம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பாப்பிறை முத்திப் பேறு பெற்ற ஆஞ்சலிக்கோவை கலைஞர்களின் பாதுகாவலராக அறிவித்தது போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.