2009-11-19 15:33:04

கத்தோலிக்கப் பல்கலைகழக மாணவர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை


நவ.19,2009 திருச்சபை மற்றும் சமூகத்தில் கத்தோலிக்கப் பல்கலைகழகங்கள் மற்றும் திருச்சபை கல்வி நிறுவனங்களின் முக்கிய பணிகள் குறித்து இவ்வியாழனன்று கத்தோலிக்கப் பல்கலைகழக மாணவர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை 16ஆம் பெனெடிக்ட். ரோமைநகரின் பாப்பிறைப் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கத்தோலிக்கப் பல்கலைகழகங்களின் சர்வதேச கூட்டமைப்பின் அங்கத்தினர்களைத் திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் அரங்கில் சந்தித்த பாப்பிறை, கலாச்சாரச் சூழலில் எழும் பிரச்சனைகளுக்கு பதிலளித்தல், கிறிஸ்தவ ஐக்கியப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல், கிறிஸ்தவ ஞானம் எனும் கொடையை ஆய்வு செய்தல், இறை வெளிப்பாடுகளை ஆழமாய்ப் புரிந்து கொள்ளுதல் போன்றவைகளுக்கென இறைமை சார்ந்த அறிவியல் பயன்படுத்தப்பட வேண்டியதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைத்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். ஒப்புரவையும், மக்களிடையே சரிநிகர் பகிர்வையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதலையும் உலகில் மக்கள் தங்கள் விசுவாசத்திற்கு சான்றாக வாழ்வதையும் தங்கள் கடமைகளை ஏற்பதையும் ஊக்குவிப்பதில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை 16ஆம் பெனெடிக்ட். விசுவாசத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இடையேயான இடைவெளி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதும் திருத்தந்தையால் வலியுறுத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.