2009-11-18 15:30:00

திருத்தந்தையின் புதன் போது மறைபோதகம்


நவ. 18, 2009 . இப்புதனுக்கான திருத்தந்தையின் மறைபோதக சந்திப்பு திருத்தந்தை 6ஆம் சின்னப்பர் அரங்கில் இடம் பெற்றது.

மத்திய கால இறையியல் குறித்து அண்மைய வாரங்களில் உரை வழங்கி வரும் நம் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், இவ்வாரம் வழங்கிய உரை, எவ்வாறு மத்திய கால கிறிஸ்தவ விசுவாசமானது, எல்லா காலத்திலும் புகழ் பெற்று விளங்கும் உன்னத கலை படைப்புகளை, அதாவது ஐரோப்பாவின் பேராலய வடிவமைப்புகளைத் தூண்டுவதற்கானக் காரணியாக அமைந்தது என்பது குறித்ததாக இருந்தது.

ரோமானிய வழிப்பாணி சார்ந்த பேராலயங்கள் அவைகளின் பெரிய அளவில் குறிப்பிடும்படியானவைகளாகவும், மெருகு நிறை சிற்பக் கலையைக் கோவில்களுக்குள் புகுத்தியவைகளாகவும் இருந்தன. வில்வட்ட வளைவுகளும், வளைவு மாடங்களும் மல்கிய சிற்பப்பாணியைக் கொண்டிருந்த இது, கிறிஸ்துவை அகில உலகத் தீர்ப்பாளராகவும், வானுலக வாயிலாகவும் சித்தரிக்கும் வடிவங்களையும் தன்னுள் அடக்கியிருந்தது. கிறிஸ்துவின் வழியாய் நுழைவதாக வடிவமைக்கப்பட்ட அங்கு, விசுவாசிகள் நுழையும் போது, தங்கள் தினசரி வாழ்விலிருந்து வேறுபட்ட ஒரு காலச் சூழலுக்குள் நுழைவதாக உணர்கின்றனர். இங்கு திருவழிபாட்டுச் சடங்குகளில் பங்கேற்கும் போது, தாங்கள் பெறவிருக்கும் நித்திய வாழ்வின் ஒரு முன்னோடி போன்ற உணர்வைப் பெற முடிந்தது. படிப்படியாக, காதிக்பாணி கட்டிடக் கலையானது ரோமானியப் பாணி கட்டிடக் கலையை நீக்கி, கட்டிடங்களுக்கு உயரத்தையும் சுடர் ஒளி வீசும் ஒரு தன்மையையும் வழங்கியது. காத்திக் கட்டிடக் கலையானது ஆன்மாவின் ஏக்கங்களைக் கட்டிடக்கலையின் வரிகளாக மாற்றியது. மேலும், இக்கட்டிடக்கலையானது, இன்று இறைவனை நோக்கி நம் மனங்களையும் இதயங்களையும் எழுப்பும் விசுவாசம், கலை மற்றும் அழகிற்கு இடையேயான கூட்டிணைப்பாக உள்ளது. விசுவாசம் கலையை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக திருவழிபாட்டில், ஓர் ஆழமான கூட்டிணைப்பு உருவாக்கப்பட்டு, காண இயலாத ஒன்றைக் காணக்கூடியதாக மாற்றுகிறது. மத்திய காலத்தின் இவ்விரு உயரிய கட்டிடக்கலை பாணிகளும் இறைவனின் மறையுண்மைகளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் வழிகளாக, அழகு எங்கனம் செயல்படுகிறது என்பதைக் காண்பிக்கின்றன. இறைவனை அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும் உதவும் உன்னத சிறந்த வழிகளுள் ஒன்றான அழகெனும் இப்பாதையை நாம் மீண்டும் கண்டு கொள்ள இறைவன் உதவுவாராக,  என தன் மறைபோதகததை வழங்கினார் திருத்தந்தை.

இவ்வெள்ளியன்று, குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம் ஏற்கப்பட்டதன் 20ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட உள்ளதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, குழந்தைகளுக்கான, குறிப்பாக, துன்புறும் குழந்தைகளுக்கான செபங்களுக்கு அழைப்பு விடுத்தார். வன்முறையால், உரிமை மீறல்களால், நோயால், போரால், பசியால் துன்புறும் குழந்தைகளை இந்நேரத்தில் நினைவுகூர்வதாகக் கூறினார் திருத்தந்தை.



பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.