2009-11-14 14:21:33

உண்மையான கிறிஸ்தவ மனச்சான்றுப் பண்புகள் ஊக்குவிக்கப்பட பிரேசில் ஆயர்களிடம் திருத்தந்தை அழைப்பு


நவ.14,2009 ஓர் உண்மையான சமூக வாழ்வு, ஒவ்வொரு மனிதனின் மனச்சான்றில் துவங்குவதால், உண்மையான கிறிஸ்தவ மனச்சான்றுப் பண்புகளை ஊக்குவிக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரேசில் நாட்டு ஆயர்களைக் கேட்டுக் கொண்டார்

அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு பிரேசில் நாட்டின் சா பவுலோ Sao Paulo மாகாணத்தின் ஆயர்களை, இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபையின் போதனைகள் கடவுளை மையம் கொண்டிருப்பதால், இவை கிறிஸ்தவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்றதே என்று கூறினார்.

மனித வாழ்வைப் புறக்கணிக்கும் நிலை உருவாகி வரும் இக்காலத்தில், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியில் உயிரியல் நன்னெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் மனிதனின் கடமையை ஆயர்கள் வலியுறுத்துமாறும் அவர் கூறினார்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் திருமணப் பிணைப்பின் பிளவுபடாத தன்மையும், மனித வாழ்வு, தாயின் கருவில் உருவானது முதல் அது இயல்பான மரணம் அடையும் வரையும் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை, சா பவுலோ மாகாண ஆயர்களிடம் கூறினார்.

உலகில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்ட பிரேசிலில் 268 மறைமாவட்டங்கள் உள்ளன.

மேலும், செர்பிய குடியரசுத் தலைவர் போரிஸ் ததிச் , செக் குடியரசின் பிரதமர் யான் பிஷர் ஆகியோரையும் இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்








All the contents on this site are copyrighted ©.