இத்தாலியில் அரசு பள்ளிகளில் சிலுவைகள் அகற்றப்பட வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புக்கு
எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபை அழைப்பு
நவ.13,2009 கடந்த வாரம் இத்தாலியில் உள்ள அரசு பள்ளிகளில் சிலுவைகள் அகற்றப்பட வேண்டுமென
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் விடுத்த தீர்ப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க
வேண்டுமென கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபை அழைப்பு விடுத்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக
கத்தோலிக்கத் திருச்சபையுடன் பல விதங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை, இந்த
பிரச்சனையில் திருச்சபையுடன் ஒத்த கருத்து கொண்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கிறிஸ்தவத்திற்கு எதிராகப்
பல பிரச்சனைகளை விளைவிக்கக் கூடியதென கூறும் கிரேக்க சபை, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில்
அடுத்த வாரம் உயர்மட்ட அவை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது என செய்திக் குறிப்பு
ஒன்று கூறுகிறது.
ஐரோப்பாவின் தனித்துவத்திற்கு சிலுவை சிறந்த ஒரு அடையாளமாக
உள்ளதென்பதை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதென கத்தோலிக்கர்கள்
முறையீடு செய்திருப்பதைத் தான் முற்றிலும் ஆதரிப்பதாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர்
இயெரொநிமொஸ் (Ieronymos) கூறியுள்ளார்.
கிரேக்க நீதிமன்றங்களில் நீதிபதியின்
இருக்கைக்கு மேலிருக்கும் சிலுவைகள் நீக்கப்பட வேண்டுமென்றும், நீதிமன்றங்களில் சத்திய
பிரமாணங்கள் எடுப்பதற்கு விவிலியம் பயன்படுத்தப்படக்கூடாதென்றும் ஏற்கனவே வழக்குகள் கிரேக்க
நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.