2009-11-13 17:19:43

இணையதளம் பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமம் மட்டுமல்ல, இணையதளமே ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, திருத்தந்தை


நவ.13,2009 கிறிஸ்துவின் படிப்பினைகளைப் புது முறைகளில் பரப்புவதற்கு இணைய தளத்தை இன்னும் நல்ல முறையில் எப்படி பயன்படுத்த முடியும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு கருத்தரங்கு  வத்திக்கானில்  இந்த வியாழனன்று ஆரம்பமானது. ஐரோப்பிய ஆயர் பேரவையின் ஆதரவுடன்  நான்கு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கிற்குத் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் அனுப்பிய செய்தியில் கணணி கலாச்சாரத்தையும் திருச்சபையின் பணிகளில் இதன் பாதிப்புக்களையும் சிந்திக்கும் படி அழைப்பு விடுத்துள்ளார். இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்த ஐரோப்பிய ஆயர் பேரவையின் துணைத் தலைவரும், க்ரோவேசிய பேராயருமான கர்தினால் ஜோசிப் போஸானிச் (Josip Bozanic ) இணையதளம் பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமம் மட்டுமல்ல, இணையதளமே ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என்றுரைத்தார்.

இணையதளம் தன்னிலே நல்லதுமல்ல, தீயதுமல்ல. மனித குலம் கண்டுபிடித்துள்ள எந்தக் கருவியுமே அவர்களின் பயன்பாட்டைப் பொருத்தே நல்லதாகவும், தீயதாகவும் மாறுகிறதென உரைத்த கர்தினால் போஸானிச், இணையதளம் இளையோரின் முக்கியமானதொரு கருவியாக இருப்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டுமெனக் கூறினார். 








All the contents on this site are copyrighted ©.