2009-11-11 14:58:06

.நா.வின் 64வது போது அமர்வில் பேராயர் மிலியோரே உரை


நவ. 11, 2009 மனித குலத்திற்கு அமைதியையும், முன்னேற்றத்தையும் கொணர்வதில்  உலகின் பல மறைகள் ஆற்றியுள்ள பணியை ஐ.நா. போது அவையிலும், பல உலக அரங்குகளிலும் கடந்த சில ஆண்டுகளாக விவாதித்து வருவது வரவேற்கத் தக்கதொரு போக்கு என ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலெஸ்தினோ மிலியோரே கூறியுள்ளார். "சமாதானக் கலாச்சாரம்" என்ற தலைப்பில் நேற்று ஐ.நா.வின் 64வது பொது அமர்வில் நடைபெற்ற விவாதங்களின் போது உரையாற்றிய பேராயர் மிலியோரே, இவ்வாறு கூறினார். 150 ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் புரட்சி ஆரம்பமான காலங்களில் மதங்கள் "மக்களை மயக்கும் போதைபொருள்" என்று கூறி வந்த உலகம், இன்றைய உலக மயமாக்கல் சூழலில், மதங்களின் இன்றியமையாதப் பணிகளால் பலரும் பயன் பெற்றுள்ளதை உணர்ந்து, மதங்கள் "மக்களின், சிறப்பாக ஏழைகளின் ஊட்டச்சத்து" என்று கூறும் அளவுக்கு மாறியுள்ளது என்று பேராயர் கூறினார். மனித வரலாற்றில் தனி மனிதர்களும், தலைவர்களும் மதங்களைப் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பிய நிகழ்வுகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்; அண்மையில் ஐ.நா. அமர்வுகளில் அரசியல் ஆதாயங்களுக்காக மதங்கள் தவறான வழிகளில் பயன்படுத்தப் படுவதை மனித உரிமை மீறல் என்னும் கோணத்தில் நாம் விவாதித்து வருவது நலமான ஒரு போக்கு என்று கூறினார் ஐ.நா.விற்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் மிலியோரே. "நமது யுகம்" எனும் தலைப்பில் (Nostra Aetate) கத்தோலிக்கத் திருச்சபை 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட மடலின் வழியாக பிற மறையினருடன் ஆரம்பித்த உரையாடல்கள் இன்றும் புத்தர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலரோடும் தொடர்ந்து வருகின்றன என்று கூறினார் பேராயர் மிலியோரே.







All the contents on this site are copyrighted ©.