2009-11-11 14:59:34

இந்திய கத்தோலிக்க இளையோர் மாநாட்டின் முடிவில், மங்களூரில் சமாதான ஊர்வலம்


நவ. 11, 2009 அண்மையில் நடந்து முடிந்த இந்திய கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான இளையோர், மாநாட்டின் முடிவில், மங்களூரின் பிரதானச் சாலைகளில் சமாதான ஊர்வலம் ஒன்றை நடத்தினர். சென்ற ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளுக்கு ஒரு மாற்று சாட்சியாக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தேறியது. இரண்டு கிலோமீடேர் நீளத்திற்கு அமைந்த இந்த ஊர்வலத்தின் முடிவில் 26 இளையோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை வழங்கிய மங்களூர் ஆயர் Aloysius Paul D Souza இளையோர் இந்நாட்டின் எதிர்காலம் என்றும் அவர்கள் மத்தியில் மதம் சார்ந்த மதிப்பீடுகள் வளர்வது மனித குலத்திற்கு நல்லது என்றும் கூறினார். இந்திய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவரான நாக்பூர் மறைமாவட்ட பேராயர் ஆப்ரகாம் விருத்தகுலங்கரா (Viruthakulangara ) இந்த இளையோர் பணிக்குழு அமைக்க உள்ள ஒரு மாதிரிகை கிராமத்திற்கு 6 ஹெக்டேர் நிலத்தைப் பரிசாக அளித்து உரையாற்றுகையில், "இளையோருக்கென இன்று நாம் முதலீடு செய்வது நாட்டையும், திருச்சபையையும் வளர்க்கும் வழிகள்" என்று கூறினார். இளையோர் மேற்கொண்ட இந்த சமாதான ஊர்வலத்தைப் பார்வையிட்ட கோபாலகிருஷ்ண காமத் என்ற இளைஞர் கூறுகையில், இது போன்ற அமைதியான, சீரான ஊர்வலங்களை பார்ப்பது அரிது என்றும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கடைபிடித்த கட்டுப்பாடு பல மேலான எண்ணங்களை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்றும் பாராட்டினார்.







All the contents on this site are copyrighted ©.