2009-11-09 15:17:02

மலேசியாவில் அரசு பறிமுதல் செய்துள்ள 15,000 மலாய் மொழி விவிலியப் பிரதிகளை உடனடியாக விநியோகிக்க வேண்டியுள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.


நவ.09,2009 விவிலியத்தில் கடவுள் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அல்லா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்காக மலேசியாவில் அரசு பறிமுதல் செய்துள்ள 15,000 மலாய் மொழி விவிலியப் பிரதிகளை உடனடியாக விநியோகிக்க வேண்டுமென்று அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அரசை கோரியுள்ளனர்.

மலேசிய அரசின் இந்நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்ட மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு, ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தனது மதத்தை அனுசரிப்பதற்கும், தேசிய மொழியைப் பயன்படுத்துவதற்கும் அரசியல் அமைப்பு ரீதியாக உரிமையைக் கொண்டுள்ளனர் என்று கூறியது.

மலேசியாவின் தேசிய மொழியான பஹாசா மலேசியாவில் அச்சிடப்பட்ட விவிலியப் பிரதிகள், அந்நாட்டின் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என்ற தப்பெண்ணத்துடன் அவற்றைப் பறிமுதல் செய்து வைத்திருப்பது நியாயமற்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே விவிலியங்களில் பஹாசா மலேசியா மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது, இது இதுவரை எந்தச் சமூகப் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்ததில்லை என்று மேலும் அவ்வறிக்கை கூறுகிறது.

மலாய் மொழியில் பரவலாக கடவுள் என்ற பெயருக்குப் பதிலாக அல்லா என்பதே பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகின்றது.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 20 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சாபாவில் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.