2009-11-09 15:33:59

மனச்சுவரை இடிப்பது எப்போது?


நவ.09,2009 வானொலி நண்பர்களே, நவம்பர் 9, இத்திங்களன்று ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இரஷ்யா, இத்தாலி, அயர்லாந்து, அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் தலைவர்கள், பிரமுகர்கள் கூடினார்கள். பட்டாசு வெடிப்புகள், இசைக் கச்சேரிகள், கூட்டங்கள் என பெர்லின் நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்த தற்போதைய ஜெர்மனியின் பிரதமர் Chancellor Angela Merkelதான் இவ்விழாவை முன்னின்று நடத்தினார். இவ்விழாவுக்கான காரணம் உங்களுக்குத் தெரியாததல்ல. அக்காலத்தில் ஜெர்மனியின் தலைநகராகத் தலைநிமிர்ந்து நின்ற பெர்லின் மாநகரத்தை கிழக்கு, மேற்கு எனப் பிரித்து உயர்ந்து நின்ற தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ளன. 1989ம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி இரவில் இரும்புத்திரை என அழைக்கப்பட்ட இந்த சுவர் இடிப்பு அரங்கேறியது. குபுகுபுவென மக்கள் மேற்கு பெர்லினில் நுழைந்தனர். காவல்படையினரின் எந்தத் துப்பாக்கிகளும் லத்திகளும் இந்த எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரிவினைக்கும் அடக்குமுறைக்கும் அடையாளமாக நின்ற இந்தப் பெர்லின் தடுப்புச் சுவரைப் பற்றிய நினைவுகளைக் கேளுங்கள்.

தற்போது இந்த பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டது. ஆயினும் அதன் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது பற்றிய ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. ஐரோப்பாவில் அன்றைய கம்யூனிச உலகத்தையும் ஜனநாயக உலகத்தையும் பிரித்த இந்தச் சுவர் ஏன் எழுப்பப்பட்டது? வரலாற்றைச் சற்றே புரட்டுவோம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்ததால் இங்கு கம்யூனிஸம்தான் இருந்தது. முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப் பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய அரசுகள் இதற்கு உடன்படவில்லை.

இதனால் வெறுப்படைந்த கிழக்கு ஜெர்மனி அரசு, எல்லை கடந்து செல்வதற்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினர். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட எண்ணியது கம்யூனிஸ அரசு. 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வேலிக்கு அருகே அகழிகள் தோண்டப்பட்டன. சுவரின் கட்டுமானப் பணிகள் துரிதமடைந்தன. இது பதிமூன்றே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது. அரசிடமிருந்து விசா என்ற அனுமதி பெறாமல் எல்லை கடப்பது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. எல்லைநெடுகிலும் கண்காணிப்புக் கோட்டைகள் கட்டப்பட்டன. சுமார் நூற்றிஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ள இச்சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டராகும். 1961ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 35 இலட்சம் கிழக்கு ஜெர்மானியர்கள், ஏதாவது ஒருவிதத்தில் தப்பித்து மேற்கு ஜெர்மனியில் குடியேறியுள்ளனர். இப்படித் தப்பிக்க முயற்சித்த போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கிழக்குப் பகுதி, மேற்கு பகுதி போல் நூறு விழுக்காடு இல்லையெனினும் அப்பகுதியை மேம்படுத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன. மேற்கு பகுதியில் தொடர்ந்து வாழ்கின்றவர்கள் தங்களது ஊதியத்தின் ஒருபகுதியை கிழக்கின் வளர்ச்சிக்காக இன்றும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சுவர் இடிக்கப்பட்டு அதன்மூலம் இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்த விழாவில் கலந்து கொண்ட இரஷ்ய அரசுத்தலைவர் Dmitry Medvedev பேசுகையில், ஐரோப்பாவைப் பிரித்த எல்லை தகர்க்கப்பட்டு தற்சமயம் அக்கண்டம் ஒன்றிணைந்துள்ளது என்றார்.

அன்பர்களே, ஐரோப்பாவை பிரித்த பிரிவினைச் சுவர் தகர்க்கப்பட்டதன் பயனாக ஐரோப்பிய கண்டம் ஒன்றிணைந்து விட்டது. சோவியத் வல்லரசு சிதைந்தது. இத்துடன் 28 வருட பனிப்போரும் முடிவடைந்தது. சீனா, இந்தியா, இரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. ஆனால் அது இடிக்கப்பட்ட அந்த 1989ம் ஆண்டிலிருந்து உலகின் வேறு பல நாடுகள் பெருஞ்சுவர்களை எழுப்பியுள்ளன, எழுப்பியும் வருகின்றன. எடுத்துக்காட்டாக, வெஸ்ட் பேங்கில் எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர், பாலஸ்தீனியரின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்து கொள்வதற்காக என்று இஸ்ரேல் நியாயம் சொல்கிறது. ஆனால் பாலஸ்தீனியருக்கோ அது இனவெறிச் சுவராகும். வளைகுடா நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட சவுதி அரேபியா, உலகிலே மிகவும் நீளமானவைகளில் ஒன்றாகவும் மிக உயர்ந்த தொழிற்நுட்ப பாதுகாப்பு கொண்டதுமான வேலிகளை முப்பது கோடி டாலர் செலவில் கட்டி வருகிறது. பிரேசில் நாட்டு ரியோ தெ ஜனெய்ரோவில், வளர்ந்து வரும் நகர்ப்புற சேரிகளை ஓரங்கட்ட சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இப்படி இன்னும் பல தடுப்புச் சுவர்கள்.

கட்டிடச் சுவர்கள், எல்லைச் சுவர்கள், மதில் சுவர்கள், அணைச் சுவர்கள் என்று சுவர்கள் பலவகை உண்டு. மண், சுண்ணாம்பு, கற்கள், சிமென்ட், கம்பி, இரும்பு போன்றவற்றால் கட்டப்பட்ட சுவர்களை நாம் விரும்பினால் நினைத்த நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கி விடலாம். ஆனால் எளிதில் இடிக்கப்பட இயலாத கண்களுக்குத் தெரியாத சுவர்களும் இருக்கின்றன. அவைதான் நம் மனங்களில் நாமே எழுப்பியுள்ள மனத்தடைச் சுவர்கள். தீண்டாமை, ஜாதீயம், ஏழைகளை வெறுத்து புறக்கணித்தல், தன்னலம், பொறாமை, சினம், பாராமுகம் போன்ற மனத்தடை சுவர்கள் நம் ஒவ்வொருவரிலும் இருக்கின்றன. இஞ்ஞாயிறன்று மாலை உரோமைத் தமிழ்சங்கம் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில்கூட இந்தமாதிரியான மனத்தடை சுவர்களைத் தமிழர்களாகிய நாம் தகர்த்தெறிய வீறு கொண்டு எழ வேண்டும் என்று கூரப்பட்டது. ஒரு இயேசு சபை குரு சொன்னார்- நான் புனே நகரில் மெய்யியல் படித்தேன். அப்பொழுது அந்நகரில் தமிழ்ச்சமூகம் கடைநிலையில் இருப்பதைப் பார்த்தேன். டில்லியில் இறையியல் படித்தேன். அங்கும் தமிழ்ச்சமூகம் அப்படித்தான் இருந்தது என்று ஆதங்கப்பட்டார். அதற்கு மறுமொழி சொல்வது போல் இன்னொரு குரு எழும்பி, இதற்குக் காரணம் இருக்கிறது. தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்றார். எனவே நமது மனதில் மண்டிக் கிடக்கும் இவை போன்ற தடைச் சுவர்களை என்று நாம் இடிக்கப்போகிறோம்? இந்த உலகம், என்று தடுப்புச் சுவர்களின்றி சுதந்திரமாக வாழும்? சுதந்திரம், முன்னேற்றம், கட்டுபாடற்ற வாணிகம், உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றை அனுபவிக்கும் இடமாக என்று இப்பூமி மாறும்?

காலம் கருணையற்றது. அது கண் முன்னே உன்னதங்களைக் குப்பையில் வீசி எறிகிறது. கண்டு பிடிக்கவும், மீட்டு எடுக்கவும், உரியவற்றுக்கு மீண்டும் கௌரவம் தரவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும். இந்த உண்மை நிகழ்ச்சியைக் கேளுங்கள். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி அமைப்பு பல லட்சம் அப்பாவி மக்களை, முக்கியமாக, யூதர்களைச் சிறைப் பிடித்து சித்ரவதை செய்தது. அச்சமயம் ஒரு குடும்பத்தில் மிச்சம் இருந்தது 13 வயதுச் சகோதரியும், அவளது எட்டு வயது தம்பியும்தான். அவர்களையும் சிறை பிடித்து இழுத்துப் போனார்கள். அவர்களைப் போல் இன்னும் எத்தனையோ சிறுவர்கள், சிறுமிகள் பல குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, ஆட்டு மந்தை மாதிரி ரயில்வே நிலையத்தில் கொண்டு குவிக்கப்பட்டனர். தாங்க முடியாத குளிர். எப்போதாவது வீசப்படும் சாப்பாட்டைப் பொறுக்கி உண்டு கொண்டு சிறுவர்கள் குளிரிலும், பயத்திலும் நடுங்கிக்கொண்டு ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். மூன்று குளிர் இரவுகள் கழித்து, ஒரு வழியாக இரயில் வந்தது. எப்படியாவது அதில் ஏறி இடம் பிடித்துவிட வேண்டும் என்று அத்தனை பேரும் வெறியோடு முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். அந்தக் கலவரத்தில், அந்தச் சிறுவன் தன் காலணிகளை விட்டுவிட்டு ஏறிவிட்டான். 'டம்... டும்' என்று ரயிலில் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. சிறுவன் தன் அக்காவிடம் ஷூக்களைத் தவறவிட்டதைச் சொன்னான். ஏற்கெனவே அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் எங்கே கூட்டிப் போனார்கள் என்றே தெரியாத நிலை. தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற அச்சமும் பதற்றமும் வேறு. எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்துவிட்டது. 'இருக்கும் கஷ்டம் போதாதா? இந்தக் குளிரில் ஷூக்கள் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறாய்? பொறுப்பில்லாமல் ஷூக்களை விட்டுவிட்டு வந்திருக்கிறாயே, முட்டாள்!' என்று ஆவேசமாகி தம்பியை என்னென்னவோ வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள். அடுத்த ரயில் நிலையத்தில், பெண்களையும் பையன்களையும் தனித்தனியே பிரித்து அடைத்தார்கள். அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் தம்பியைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு கடும் சிறை முகாமில் அவள் அடைக்கப்பட்டாள். போர் முடிந்த பிறகு அவள் விடுதலையாகி வெளியே வர மூன்றரை வருடங்கள் ஆகின. அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே உயிரோடு இல்லை என்று அறிந்தாள். தம்பியைக் கடைசிக் கடைசியாகப் பார்த்தபோது, இடைவிடாமல் திட்டித் தீர்த்தாளே, அதுதான் அவள் உறவினரோடு கடைசியாகப் பேசிய வார்த்தைகள். அவள் உருகினாள். ஆனால், உடைந்துபோகவில்லை. 'நான் யாருடன் இனி பேசினாலும், அது அவர்களுடன் பேசும் கடைசிப் பேச்சாக இருந்தால் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் பேசப் போகிறேன் என்று மனதில் ஓர் உறுதிபூண்டாள்.

இந்த ஓர் உறுதி எடுத்ததால், பேரிழப்புகளைச் சந்தித்திருந்த போதிலும், அதிலிருந்து ஒரு மாபெரும் நன்மையை அவளால் எடுக்க முடிந்தது. இச்சிறுமி போல நம்மாலும் நமது மனத்தடைச் சுவர்களை இடிப்பதற்கு மனதில் உறுதி எடுக்கலாம் அல்லவா?

ஆனாலும் அன்பர்களே, கற்சுவரை இடிக்கலாம், மனச்சுவரை இடிப்பது கடினமாகவல்லவா இருக்கின்றது என்று மனது சொல்கிறதா? முயன்றால் முடியாதது உண்டா? மனம் உண்டால் மார்க்கமுண்டு. ஆம். மனம் உண்டால் இடமுண்டு.

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், அதில் கிடைக்கக்கூடிய நன்மையில்தான் கவனம் வைப்பேன் என்ற விழிப்பு உணர்வுடன் ஒருவன் உறுதிகொண்டால், வாழ்க்கையே அவனுக்கு வெற்றிதான். தோல்வி என்பதே கிடையாது!''



.








All the contents on this site are copyrighted ©.