2009-11-09 15:16:11

உண்மையான வளர்ச்சி, ஒருமைப்பாட்டில் இடம் பெற வேண்டுமென்கிறார் திருத்தந்தை.


நவ.09,2009 பல்வேறு மக்களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கு இடையிலும் உரையாடலை ஊக்குவித்து நியாயமான வேறுபாடுகளை மதிக்காத வரை உறுதியான வளர்ச்சி இடம் பெறாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கான மேய்ப்புப்பணி அவை இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ள உலக மாநாட்டின் சுமார் 300 பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உண்மையான வளர்ச்சி, ஒருமைப்பாட்டில் இடம் பெற வேண்டுமென்றும் கூறினார்.

நாடு விட்டு நாடு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகமாகியுள்ள வேளை, இது உலகில் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கின்றது மற்றும் ஏழை நாடுகளுக்கும் தொழிற்சாலை நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார இடைவெளியை விரிவுபடுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்புக்களைக் குறைத்துள்ளது மற்றும் தற்காலிக வேலைகளைத் தேடுவோரின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்நிலை, மக்கள் தங்களது தாயகத்தைவிட்டு வெளியேறவும், தங்களது மனித மாண்பையும் ஒதுக்கிவிட்டு, எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக இருக்கும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இதில் பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் சமூகச் சட்டங்கள் முன்வைக்கும் இன்னல்களையும் எதிர்நோக்க வைத்துள்ளது என்று உரைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கும் கிறிஸ்தவ சமுதாயம், இறைசாயலில் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும், குறிப்பாக துன்பத்தில் இருப்போரை மதித்து அக்கறை செலுத்துகின்றது என்றும் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.