2009-11-09 15:15:25

இளையோர் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள, கல்வியின் கலாச்சார மற்றும் சமயக் கூறுகளுக்கிடையே முழுமையான இணக்கம் தேவை, - திருத்தந்தை.


நவ.09,2009 கல்வியின் கலாச்சார மற்றும் சமயக் கூறுகளுக்கிடையே முழுமையான இணக்கம் தேவை, அதன்மூலம் இளையோர் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள உதவ முடியும் என்று கூறினார் திருத்தந்தை.

ஞாயிறன்று பாப்பிறை ஆறாம் பவுல் நிறுவனத்தின் புதிய அமைப்பைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை, உண்மையாகவே கல்வி நெருக்கடி ஏற்பட்டுள்ள ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றார்.

எனவே வருங்காலத் தலைமுறைகளுக்கு, தகுதிவாய்ந்த, உறுதியான விதிமுறைகளை நம் வழியாகக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

மேலும், பாப்பிறை ஆறாம் பவுல் திருச்சபையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் மற்றும் தனது சக்தி அனைத்தையும் திருச்சபைக்குப் பணிபுரிவதிலேயே செலவழித்தார் என்று ஞாயிறு திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஞாயிறு வாசகங்களில் கொடுக்கப்பட்ட இரண்டு விதவைகள் பற்றியும் குறிப்பிட்ட அவர், கைம்பெண்கள் மீதும், அவர்கள் ஆற்றும் நற்காரியங்களிலும் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென்ற இயேசுவின் கூற்றையும் சுட்டிக் காட்டினார்.

குருக்களின் கற்புநெறி வாழ்க்கை பற்றி பாப்பிறை ஆறாம் பவுல் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு இந்த சர்வதேச குருக்கள் ஆண்டில், அகிலத் திருச்சபையும் இத்திருத்தந்தையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.