2009-11-07 14:49:41

திருத்தந்தை - விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம்


நவ.07,2009 விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீட பொதுநிலையினர் அவை, “திருச்சபையும் விளையாட்டும்” என்ற தலைப்பில், உரோமையில் இவ்வெள்ளி, சனி தினங்களில் நடத்திய கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை, விளையாட்டுகளின் நேர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு இளையோருக்கான விளையாட்டுகளுக்குத் திருச்சபை தொடர்ந்து ஆதரவளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

ஓய்வு நேரங்களைப் பயன்படுத்துவதில் மட்டுமல்லாமல் தனியாட்களை உருவாக்குவதிலும் விளையாட்டு முக்கிய அங்கம் வகிப்பதால் இதற்கு திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கின்றது என்றுரைத்துள்ள அவர், புதிய தலைமுறைகளை மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களில் உருவாக்குவதற்குப் பயிற்சி கொடுக்கப்படுமாறும் வலியுறுத்தினார்.

இலக்குகளை அடைவதில் போட்டி, தைரியம், விடாஉறுதி போன்றவற்றை ஊக்குவிக்கும் அதேவேளை, உடலுக்கு கேடு வருவிக்கும் போதைப் பொருள் எடுப்பது போன்றவை தவிர்க்கப்படுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இச்செய்தியானது, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரைல்கோவுக்கு (Stanislaw Rylko) அனுப்பப்பட்டுள்ளது.

நவம்பர் 6,7 தேதிகளில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சூசன் செயின்ட் சிங் (Susan Saint Sing), பாப்பிறை 2ம் ஜான் பவுல் விளையாட்டு நிறுவனத்தின் தலைவர் எடியோ கோன்ஸ்தான்தினி (Edio Constantini) உட்பட பல பிரமுகர்கள் உரையாற்றினர்.








All the contents on this site are copyrighted ©.