2009-11-07 14:51:36

கியூபத் திருச்சபை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் அரசிடம் வேண்டுகோள்


நவ.07,2009 கியூபத் திருச்சபை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதன் மூலம் அந்நாட்டில் அது தனது மறைப்பணியை முழுமையாய் நிறைவேற்ற முடியும் என்று திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் கூறினார்.

கியூப கம்யூனிச நாட்டிற்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் பேராயர் க்ளவ்தியோ சேல்லி (Claudio Celli), கியூப அரசுத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவிடம் (Raúl Castro) இந்த அனுமதிக்கு விண்ணப்பித்தார்.

இக்காலத்தில் புதிய தொழிநுட்பங்கள் நமக்கு வழங்கும் வானொலி, தொலைக்காட்சி, இன்டர்னெட் பன்வலை அமைப்புகள் போன்ற மாபெரும் சமூகத் தொடர்பு சாதனங்களை கியூபாவிலுள்ள திருச்சபை, பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார் பேராயர் சேல்லி.

கியூபாவில் திருச்சபை சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவது 1960 களில் தடை செய்யப்பட்டது. எனினும் அண்மை ஆண்டுளில், குறிப்பாக, பாப்பிறை 2ம் ஜான் பவுல் 1998ம் ஆண்டில் அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர் இந்தத் தடை தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கியூபாவில் இன்டர்னெட் பயன்படுத்தப்படுவது பரவலாகக் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபா மீது விதித்துள்ள தடையினால் இந்த விண்கோள் தொடர்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

2008ம் ஆண்டில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, கியூபாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது இதே வேண்டுகோளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.