2009-11-05 16:04:08

நாடெங்கும் இடம் பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பலமதங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கொல்கட்டாவில் ஒன்பது மணி நேர உண்ணாவிரதம்


நவ.05,2009 நாடெங்கும் இடம் பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பலமதங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இப்புதனன்று கொல்கட்டாவில் ஒன்பது மணி நேர உண்ணாவிரதத்தை அனுசரித்தனர்.

இந்த உண்ணாவிரதம் பற்றி நிருபர்களிடம் பேசிய, இதற்கு ஏற்பாடு செய்த ஓம் பிரகாஷ் ஷா, மக்களின் அமைதிக்கான தேடல் மற்றும் வன்முறைக்கான எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஆவலின் முதல் முயற்சியே இது என்று கூறினார்.

கொல்கட்டாவில் மகாத்மா காந்தி சிலைக்கு முன்னர் நடைபெற்ற இந்த அமைதிக்கான அழைப்பு நடவடிக்கையில், ஒரு கத்தோலிக்க குரு, ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் உட்பட சுமார் 30 சமயத் தலைவர்களும் 300 பொது நிலையினரும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் பற்றிப் பேசிய வட இந்திய கிறிஸ்தவ சபை ஆயர் பரிமி சாமுவேல் பவன ராஜூ, மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை நிறுத்தக் கூடாது என்றும், வறுமை, பசி, ஒதுக்கப்படுதல் போன்றவையே வன்முறைக்கான மூலக்காரணம் என்றும் தெரிவித்தார்.

இந்திய சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய காந்திஜி, 1918க்கும், 1948க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 17 தடவைகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். 1924ம் ஆண்டிலும், 1943ம் ஆண்டிலும் நடத்திய இரண்டு உண்ணாவிரதப் போராட்டங்கள் ஏறத்தாழ மூன்று வாரங்கள் நீடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.