2009-11-05 16:03:05

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற 21ம் தேதி சிஸ்டீன் சிற்றாலயத்தில் உலகின் பல்வேறு கலைத்துறையினரைச் சந்திக்கிறார்


நவ.05,2009 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வத்திக்கானில் வருகிற 21ம் தேதி உலகின் பல்வேறு கலைத்துறையினரைச் சந்திக்கவிருப்பது குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வியாழனன்று விளக்கியது திருப்பீட கலாச்சாரத் துறை.

திருப்பீட கலாச்சாரத் துறை தலைவர் பேராயர் ஜான் பிராங்கோ ரவாசி, வத்திக்கான் அருங்காட்சியகத் தலைவர் பேராசிரியர் அந்தோணியோ பலுலோச்சி, திருப்பீட கலாச்சாரத் துறையின் கலை மற்றும் விசுவாசப் பிரிவின் பொறுப்பாளர் பேரருட்திரு பாஸ்குவாலே இயாகோபோன் ஆகியோர் இந்நிருபர் கூட்டத்தில் விளக்கினர்.

திருத்தந்தை 2ம் ஜான் பவுல் உலகக் கலைஞர்களுக்கு கடிதம் எழுதியதன் பத்தாம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பவுல் உலகக் கலைஞர்களைச் சந்தித்ததன் 45ம் ஆண்டு ஆகியவற்றையொட்டி இந்த நவம்பர் 21ம் தேதி வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகக் கலைஞர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, இலக்கியம், கவிதை, இசை, பாடல், திரைப்படம், நடனம், நாடகம், புகைப்படம் எனப் பல துறைகளில் சிறந்த இந்தியா உட்பட உலகின் சுமார் 500 கலைஞர்களுக்குத் திருப்பீட கலாச்சாரத் துறை அழைப்புவிடுத்துள்ளதாகவும் இந்நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.