2009-11-03 15:36:39

விவிலியத் தேடல்


கேட்காமல் கொடுக்கப்படும் உதவிகள், பெண்கள் சந்திக்கும் சவால்கள் இவைகளைப் பற்றி இந்த வார விவிலியத் தேடலில் சிந்திப்போம். லூக்கா நற்செய்தி யூத சமுதாயத்தில் பலவகைகளிலும் தாழ்ந்தவர்களென கருதப்பட்ட ஆயக்காரர்கள், பாவிகள், நோயாளிகள், பெண்கள், விதவைகள் என்று பலரையும் மதித்து, சமுதாயத்தில் அவர்களுக்குரிய இடத்தைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ள ஒரு நற்செய்தி. லூக்கா மரியன்னையின் மேல் தனி அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால் அவருக்கென்று தன் நற்செய்தியில் தனி இடம் கொடுத்திருந்தார். அதேபோல், இந்த நற்செய்தியில் புதுமைகள், உவமைகள், இன்னும் மற்ற சம்பவங்களில் பெண்களுக்குத் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய இரு புதுமைகளை இன்று நம் விவிலியத் தேடலில் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
நயீன் நகர விதவையின் ஒரே மகனை உயிர்பித்தது, கூன் விழுந்தப் பெண்ணைக் குணமாக்கியது. இவ்விரு நிகழ்வுகளையும் கூறும் நற்செய்திகளுக்குச் செவிமடுப்போம்.

லூக்கா நற்செய்தி 7: 11-16
அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார்.இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

லூக்கா நற்செய்தி 13 : 10-13
ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ' அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர் ' என்று கூறி,13 தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இந்த இரு புதுமைகளில் முதலில் மனதில் படும் ஒரு சிறப்பு அம்சம்: இரு புதுமைகளிலும் இயேசு தானாக முன்வந்து இந்தப் புதுமைகளைச் செய்கிறார். லூக்கா நற்செய்தியில் இயேசு நலம் நல்கும் புதுமைகள் 17 காணக் கிடக்கின்றன. அவற்றில் 11 புதுமைகளில் நோயுற்றோர் அல்லது அவர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும் போது இயேசு குணமளிக்கிறார். மீதம் ஆறு புதுமைகளில், மூன்று புதுமைகள் சச்சரவான சூழ்நிலையில் நிகழ்கின்றன. இயேசுவுக்கும் பிற மதத் தலைவர்களுக்கும் நடக்கும் போராட்டங்களில் ஒன்று அவர் ஒய்வு நாளில் குணமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு. இந்தப் பிரச்சனைக்கு மத்தியில், இயேசு மூவரை அவர்கள் கேட்காமலேயேக் குணமாக்குகிறார். (லூக்கா6:6-11, 11:14-15, 14:1-16) ஒய்வு நாளைப் பற்றி மக்களும் மதத்தலைவர்களும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென இயேசு இந்தப் புதுமைகளைச் செய்வதுபோல் தெரிகிறது.
நான்காவது புதுமையில் நாம் ஏற்கனவே சிந்தித்தது போல், ரத்தக் கசிவுள்ள பெண் கூட்டத்தில் யாரும் அறியாமல் குணம் பெற விரும்பி, இயேசுவின் ஆடைகளின் விளிம்பைத் தொட்டார். விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட புதுமைகள் இந்த நான்கும். இவைகளைப் போல்தாம் இன்றையப் புதுமைகளும். நயீன் நகர விதவை, கூன் விழுந்த பெண் ஆகிய இருவரின் வாழ்க்கைப் பிரச்சனைகளை, அவர்கள் சந்தித்த போராட்டங்களை நன்கு உணர்ந்த இயேசு இப்புதுமைகளை எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி செய்கிறார்.

குறிப்பறிந்து செயல் படுவதைப் பற்றி சிந்திக்கலாம். உதவிகள் தருவதிலும், பெறுவதிலும் பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும் போது, அல்லது விண்ணப்பிக்கும் போது அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால் அதைவிட மேலான ஒருநிலை உண்டு. நமது கவலைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்த போது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், நம் கவலைகளுக்குத் தீர்வுகள் சொல்லும் போது, அல்லது அந்தக் கவலைகளைத் தீர்த்து வைக்கும் போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா? செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, போஸ்டர் ஒட்டி, கட் அவுட் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படி நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும் போது, எதோ அந்த இறைவனே இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான் இந்தப் புதுமையிலும். “கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு கொடுக்கும்” என்பதைக் கேள்விபட்டிருக்கிறோம்.
தருவதையும், பெறுவதையும் பற்றி பேசும் போது ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க நாள் முழுவதும் வெயிலில் நின்று விண்ணப்பத்தை அரசிடம் சமர்ப்பித்து விட்டு வந்து, மாதங்கள் பலவாக, சில சமயங்களில் ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும் ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்து போகும் ஏழைகளை நினைத்துப் பார்க்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்னால், விவிலியத் தேடலில் இரத்தக் கசிவு நோயுள்ள ஒரு பெண்ணை இயேசு குணமாக்கிய புதுமையைச் சிந்தித்தோம். அப்போது, இயேசு அந்தப் பெண்ணைக் காட்டிலும், அவரைச் சுற்றியிருந்த கூட்டத்தை எப்படி குணமாக்கினார் என்ற கோணத்தில் அந்தப் புதுமையைச் சிந்தித்தோம். இன்று இப்புதுமைகளில் இரு வேறு பெண்களைப் பற்றி சிந்திக்க நமக்கு ஒரு அழைப்பு.
முதலில், நயீன் விதவையைப் பற்றி சிந்திப்போம். யூதர் குலத்தில் பொதுவாகவே பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் விதவைகள் இன்னும் பரிதாபமான நிலை வகிப்பவர்கள். இன்றும் நம் நாட்டில் இந்த நிலைதானே. நல்ல காரியம் நடக்கும் வேளையில், அங்கு விதவைகளுக்கு இடமில்லை, அப்படியே அங்கு வந்தாலும், அவர்கள்  ஒதுங்கி நிற்க வேண்டும். இது போன்ற நியதிகள் இன்னும் நம் பழக்கத்தில் இல்லையா?
நயீன் விதவைக்கு இருந்ததோ ஒரே மகன். அவனும் இளைஞன். அவனை அந்தத் தாய் எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும். தனி ஒரு பெண்ணாய் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது நாம் வாழும் இக்காலத்தில் நம் கண்ணால் காணும் ஒரு எதார்த்தம். இத்தனைச் சவால்களையும், பயங்கரமான சூழல்களையும் சமாளித்து அந்த விதவை வளர்த்த அந்த நம்பிக்கை இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.
தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான் பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளைச் சாகும் நிலையில் இருக்கும் போது, எத்தனை பெற்றோர் அந்த பிள்ளைக்குப் பதிலாகத் தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நயீன் விதவையும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அந்த பெண் இருந்த நிலையை இயேசு உணர்திருந்தார். ஒரு வேளை மகனது அடக்கத்தை முடித்து விட்டு, தன் வாழ்வையும் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக அந்த சவ ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த விதவையின் நிலையை இயேசு நன்கு உணர்ந்தவராய், அந்த பெண்ணைக் கேட்காமலேயே இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார். மகனை மட்டும் அல்ல, அந்தத் தாய்க்கும் மறு வாழ்வு தருகிறார்.
விதவைகளின் மறு வாழ்வு பற்றி மதங்களும், பிற சமூக சேவை நிறுவனங்களும் பேசுகின்றன. ஆனால், நடைமுறையில் இன்றும் விதவைகள் சந்திக்கும் பல போராட்டங்கள் தீரவில்லை. கணவனை இழந்த இவர்கள் மேலும் சமுதாயத்தால் தங்கள் மதிப்பையும் இழப்பது நியாயமற்ற செயல். நயீன் பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு நாம் வாழும் சமுதாயத்திலும் விதவைகளைப் பேணி காக்கும், மதித்து வாழும் மனதை நமக்கு தர வேண்டுவோம்.

அடுத்ததாக, கூன் விழுந்த பெண். நற்செய்தி இவரைப் பற்றி சொல்லும் இரு குறிப்புகள் இவை: 18 ஆண்டுகளாய் இந்த நோயினால் கட்டுண்ட பெண். தொழுகைக்கூடத்தில் இருந்த பெண். இவைகளைப் பார்க்கும் போது, ஒரு சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வேளை எதாவது ஒரு குடும்பத்தில் இருந்த இப்பெண், அவரது நோய் காரணமாக குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.  சமுதாயத்தால் பல வகைகளில் குட்டப்பட்டு, குனிந்து குள்ளமாய்ப் போன சக்கேயுவைப் பற்றி விவிலியத் தேடலில் ஒரு சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தோம். அதே போல் தன் குடும்பமும் சமூகமும் அவர் மீது சுமத்திய பழிச் சொற்களால், கூனிக் குறுகி வாழத் தொடங்கிய இந்தப் பெண்ணின் உடலில் கூன் விழுந்து போனது. யூதர்களின் தொழுகைக் கூடங்களில் பெண்கள் தங்குவது அரிது. ஊரே ஒதுக்கி வைத்த பின், யார் கதி? கடவுளே கதி என்று தொழுகைக் கூடத்தில் தஞ்சம் புகுகின்றார். நோயுற்றோரையும், முதியோரையும் ஒதுக்கி வைக்கும் நமது இன்றைய சமூகத்தை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அக்டோபர் மாதத்தில் வயதானோருக்கென ஒரு நாளை ஒதுக்கி வைக்கிறோம். நாளை மட்டும் ஒதுக்கினால் பரவாயில்லை. ஆளையே ஒதுக்கி விட்டால்? வயதானோரின் நாளையொட்டி வத்திக்கான் வானொலியில் முதியோரைப் பற்றி ஏற்கனவே எண்ணங்கள் பேசப்பட்டன.
அன்புள்ளங்களே இன்றையப் புதுமைகள் வழியாக ஒரு சில பாடங்கள்:
கேட்காமலே தருகின்ற பெரிய மனதை இறைவன் தர வேண்டுவோம்.பெண்கள், அதிலும் சிறப்பாக நலமிழந்த, கணவன் என்ற உறவிழந்த பெண்கள், வயதில் முதிர்ந்த பெண்கள்... எல்லாரையும் நமது சமுதாயம் பேணி காக்க வேண்டுமென மன்றடுவோம்.







All the contents on this site are copyrighted ©.