2009-11-02 15:05:02

நவம்பர் 03 நற்செய்தி லூக். 14, 15-24


அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், ' இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர் ' என்றார்.16 இயேசு அவரிடம் கூறியது: ' ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்.17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ' வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது ' என்று சொன்னார்.18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ' வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ' என்றார்.19 ' நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ' என்றார் வேறொருவர்.20 ' எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது ' என்றார் மற்றொருவர்.21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ' நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும் ' , என்றார்.22 பின்பு பணியாளர், ' தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது ' என்றார்.23 தலைவர் தம் பணியாளரை நோக்கி, ' நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.








All the contents on this site are copyrighted ©.