2009-11-02 15:10:34

இறப்பு வாழ்வின் முடிவல்ல


நவ.02,2009 சரவணகுமார். இந்த இளைஞர், செல்லப்பன் - பாப்பாயி என்ற தம்பதிக்கு நான்கு பெண்களுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் வாரிசு. இவர் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள மூங்கில்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் லண்டனில் எம்.பி.ஏ. முடித்திருக்கிறார். அங்கேயே ஒரு வேலையையும் தேடிக்கொண்டு... இரண்டு மாதங்களுக்கு முன்பு மூங்கில்பட்டி வந்து உறவினர்களுக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சந்தோஷமாக லண்டனுக்கு ஃபிளைட் ஏறினார். ஆனால் இன்று அவர் உயிரோடு இல்லை..! இலண்டனில் இருக்கிற அடையாளம் தெரியாத பசங்க சிலர் சரவணகுமாரை அடிச்சே கொன்னுட்டாங்க!'' இந்தப் பசங்க, அவனிடம் இருந்த செல்போனையும் பணத்தையும் பறிச்சிக்கிட்டு மண்டையில் இரும்பால் அடித்திருக்கிறார்கள் என்று நமது தமிழ் வார இதழ் ஒன்றில் வாசித்தோம். ஆம். வழிப்பறி சரவணகுமாரது உயிரைப் பறித்துவிட்டது! அன்பர்களே, இப்படி எத்தனையோ சரவணகுமார்களின் திடீர் இறப்புகள், உறவுகளை ஆழாத் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உள்நாட்டுப் போரில், தற்கொலை குண்டு வெடிப்பில், துப்பாக்கிச் சூட்டில், பூமி அதிர்ச்சியில், விபத்தில், திடீர் மாரடைப்பில், நோயில் என, பெற்றோரின் கண்ணெதிரே பிள்ளைகளும், பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்க பெற்றோரும் இறக்கின்றனர்.

நவம்பர் இரண்டாம் தேதி. இந்த நாள், மற்றெல்லா நாட்களையும்விட மிக அதிகமாக மறைந்த நமது உறவுகளை நினைக்க வைக்கின்றது. கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்குச் சென்று அவற்றைச் சுத்தம் செய்து மெழுகுதிரிகள் ஏற்றி பூக்களால் அலங்கரிக்கின்றனர். அவர்களுக்காகச் செபிக்கின்றனர். "இப்படி கல்லறைகளுக்குச் செல்வது, இறந்தவர்களின் பூத உடல்கள் அவ்விடத்தில் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவர்கள் இறுதி உயிர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகின்றது. அத்தோடு, இப்படி இறந்தவர்களை நினைத்து செபிப்பதும், அவர்களைக் கௌரவிப்பதற்குமான சிறந்த வழி, விசுவாசமும் நம்பிக்கையும் பிறரன்பும் நிறைந்த செயல்களைச் செய்வதே" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் ச RealAudioMP3 ொல்லியிருக்கிறார்.

ஒருவர் பெயரைச் சொல்லி அவர் இறைவனடி சேர்ந்தார், மேலே போய் விட்டார், என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் உண்மையில் ஒருவர் ஒரேயொரு தடவைதான் மரணிக்கிறாரா என்று Roshi Philip kapaleu என்பவர் கேட்கிறார். இவர் சொல்கிறார் : “மனிதர் ஒரேயடியாக மரணிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளுமே மரணம் அடைகின்றனர்” என்று. என்ன அன்பர்களே! கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதா?

ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் இதுதான் உண்மை. ஏன் எனது வாழ்க்கையில்கூட எனக்கே செத்துப் போனதாக உணர்ந்த நேரங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, எனது சகோதரர் விபத்தில் இறந்து விட்டார் என்ற தகவலை திடீரெனத் தொலைபேசியில் கேட்ட போது எனக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போனதாக உணர்ந்திருக்கிறேன். இப்படி ஏறக்குறைய எல்லாருக்குமே ஏதாவது ஒரு அனுபவம் கிடைத்திருக்கலாம். நீ தான் எனது நிரந்தரத் துணைவி என்று காதலித்து கல்யாணம் செய்தவர் தன்னைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்தும் போது அந்தப் பெண் தினம் தினம் செத்துக் கொண்டுதானே இருப்பாள். கடந்த வாரத்தில் உரோமையில் இதையொத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்தப் பெண் தனது பச்சிளம் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்தாள்.

நீண்ட நாள் வாழ்ந்த இடத்தைவிட்டுப் போகிற போதும், நீண்ட நாட்கள் பழகிய நட்பைவிட்டு நகருகிற போதும், மனதுக்கு நெருக்கமானவர்கள் கஷ்டப்படுகிற போதும், நம்மை ஒருவர் உதறித் தள்ளி உதாசீனப்படுத்துகின்ற போதும் உடம்பு சாகா விட்டாலும் மனது செத்து விடுகிறதே! அந்நேரங்களில் மனதில் ஏற்படும் வெற்றிடத்தை மரணம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படிச் சொல்வது? அந்தக் கண நேரங்களில் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது போலத்தானே இருக்கின்றது! வானொலி நண்பா! உண்மையான அன்பை, அடிப்படையான பகிர்தலை, அனுசரித்துப் போகும் பண்பை நாம் இழந்து விடும் போதெல்லாம் ஒட்டு மொத்த இறப்புக்கு நாம் தயாராகிறோம் என்பதே உண்மை. உங்களை ஒன்று கேட்கிறோம்-ஆன்மா இறந்த பிறகு உடல் மட்டும் உயிரோடு இருப்பதால் ஏதாவது பயன் கிட்டுமா? 1528ம் ஆண்டில் லொயோலா இஞ்ஞாசியார் பாரிசில் படித்துக் கொண்டிருந்த போது உடன்படித்த பிரான்சிஸ் சவேரியாரிடம் அடிக்கடி சொல்வாராம்: “மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் அதனால் அவனுக்கு வரும் பயன் என்ன?” என்று. இந்த அருள்வசனமே சவேரியாரின் மனமாற்றத்திற்கு வித்திட்டது என்பது வரலாறு. ஆம். உடல் இறப்பைவிட ஆன்மாவின் இறப்பே ஆபத்தானது.

எனவே ஆன்மாவை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமா? அன்பை அள்ளிக் கொடுங்கள். பகிர்ந்து வாழுங்கள். பிறரோடு அனுசரித்துப் போகும் பண்பில் வளருங்கள். ஒருசமயம், சீடன் ஒருவன் தனது குருவிடம், “உலகிலே அதிசயமான விடயம்” எது என்று கேட்டான். அதற்கு குரு, “தன் கண் முன்னாலேயே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும், தான் மட்டும் இறக்கமாட்டோம் என்பது போல் மனிதர் வாழ்வதே அந்த அதிசயமான விடயம்” என்று சொன்னாராம். நம் மத்தியில் ஆஹா...ஓஹோ...என்று பதவி புகழோடு வாழ்ந்தவர்களின் திடீர் மரணத்தைப் பார்த்தும்கூட ஏனோ நம்மில் பலர் தாங்களும் இறப்போம் என்ற உணர்வின்றி வாழ்கின்றனர். ஒரு ஞானி சொன்னது போல, வாழ்க்கை என்பது ஒரு பாலம். இதைக் கடக்க மட்டுமே முடியும். இங்கு யாரும் வீடு கட்டித் தங்க முடியாது.

ஆயினும் இந்தத் திடீர் மறைவுகள் சிலரது வாழ்க்கையை மாற்றி இருக்கின்றது என்பதும் உண்மை. சே.. என்னடா வாழ்க்கை, இவ்வளவுதானா, நாளை என்பது, ஏன் அடுத்த நிமிடம் என்பது நிச்சயமில்லை என்று தங்களது வாழ்க்கையை யோசிக்கத் தொடங்கியவர்களைப் பார்த்திருக்கிறேன். அண்மையில் அந்த ஆள், “இங்கே பாரு தம்பி. காசு பணம்னு நாயா அலையாதே. உம் உசுரு உன் கையில் இல்லை. கடவுள் எப்ப எடுப்பார்னு உனக்கே தெரியாது, அதனால இப்பொழுதே நாளுபேரை மகிழ்ச்சிப்படுத்து, நாளு பேருக்கு நல்லது செய், மத்தவங்களைப் பற்றி அவதூறு பேசாதே, நல்லதையே நினை, நல்லதையே பேசு, நல்லதையே செய். நீ சாகும் போது நிம்மதி கிடைக்கும். நீ செத்த பிறகு நல்லகதி கிடைக்கும். நீ செத்த பிறகு நாளு பேர் உன்னைப் பற்றி நல்லாப் பேசுவா” என்று புத்தி சொல்லிக் கொண்டிருந்தார். அவரா இவர் என்று அதிசயித்தேன். அவரது உற்ற நண்பரின் இறப்பே இதற்கு காரணம் என்று பிறகு புரிந்து கொண்டேன்.

வனத்தில் பூக்கின்ற பூக்கள் எல்லாம் மணம் வீசுவதில்லை. அதேபோல் பிறக்கின்ற மனிதர் அனைவரும் புண்ணியம் அடைவதில்லை. அவரவர் தாம் வாழ்ந்த விதத்தை வைத்தே போற்றப்படுகிறார்கள்.



அந்தப் பெரியவருக்குப் பயங்கரமான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அண்டை வீட்டார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரது நிலைமை மோசமடைந்தது. அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் இராணுவத்தில் இருக்கும் தனது ஒரே மகனைப் பார்க்கணும் என்று மட்டும் முணங்கிக் கொண்டிருந்தார். தகவல் அனுப்பப்பட்டது. இராணுவத்திலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞனும் வந்தான். இராணுவ உடையில் அவனைப் பார்த்த, அந்த முதியவரைக் கவனித்து வந்த தாதிப்பெண், அவனை ஆசையோடு அவரிடம் அழைத்துச் சென்றாள். அவரிடம், ஐயா உங்க மகன் வந்திருக்கான் என்று சொன்னதும் இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்து புன்முறுவலை உதிர்த்தார். அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டார். மீண்டும் கண்களை மூடினார். அந்த இரவு முழுவதும் இளைஞன் கையைப் பிடித்தபடியே இருந்த பெரியவர் அதிகாலையில் இறுதி மூச்சை விட்டார். முதியவர் இறந்த செய்தி அறிந்த அந்தத் தாதிப்பெண் இளைஞனிடம், என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் என்றாள். அப்போது அவன், மன்னிக்கவும். இவர் என்னோட அப்பா இல்லை. தந்தி வரவும் விபரம் அறிவதற்காக எனது தங்கையோடு தொடர்பு கொள்ள பலதடவைகள் முயன்றேன். முடியவில்லை. சரி. போய்தான் பார்ப்போமே என்று இங்கு வந்தேன். இந்தப் பெரியவரின் பெயர் முகவரி எல்லாவற்றையும் வந்தவுடன் பார்த்தேன். இவர் என்னுடைய அப்பா இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இராணுவத்தில் எனது பெயரிலே இன்னொரு இளைஞன் வேறொரு பிரிவில் இருக்கிறார். அவருக்குப் போக வேண்டிய தகவல் எனக்கு வந்திருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். ஆனால் அவருக்குச் செய்தி சொல்லி அவர் வந்து சேரும் வரை முதியவர் தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் எழும்பியது. அதேசமயம் தனது மகன் வந்து விட்டான் என்ற அவருடைய திருப்தியையும் நான் கெடுக்க விரும்பவில்லை. அதனால்தான் அவர் பக்கத்திலே இருந்தேன் என்றான்.

தன்னையே கொடுப்பது சிறந்த குணம். அதனினும் சிறந்தது ஒருவரின் தேவையை உணர்ந்து கொடுப்பது. ஒருவர் பணத்தை வாரி வழங்கலாம். ஆனால் அருகாமையையும் நேரத்தையும் கொடுப்பது சற்றுக் கடினமானதே. எனவே அன்பைக் கொடுப்போம், பகிர்வோம். ஆன்மாவை இறப்பிலிருந்து காப்போம். இறப்பு வாழ்வின் முடிவல்ல, அது ஒரு நிகழ்வு.








All the contents on this site are copyrighted ©.