2009-10-30 16:12:22

பல்வேறு இன, கலாச்சாரங்களைக் கொண்ட பானமா நாட்டில் சமூக சமத்துவம் இன்றியமையாதது, திருத்தந்தை


அக்.30,2009 இவ்வெள்ளியன்று, திருப்பீடத்துக்கான பானமா நாட்டுப் புதிய தூதுவர் டேலியா கார்டெனாஸ் கிறிஸ்டியிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, பல்வேறு இன, கலாச்சாரங்களைக் கொண்ட பானமா நாட்டில் சமூக சமத்துவம் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார்.

அந்நாட்டின் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இதில் ஒவ்வொருவரும் தங்களது சுயநல இலாபங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஒருவருக்கொருவர் தோழமையும் ஆதரவும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பானமாவின் தனித்துவத்தை வடிவமைப்பதில் நற்செய்தி ஒரு முக்கியமான அங்கம் வகித்துள்ளது என்றும், 1513ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி திருத்தந்தை பத்தாம் லியோ, அமெரிக்காவின் முதல் மறைமாவட்டமாக பானமாவின் சாந்தா மரியா ல ஆன்ட்டிஹூவாவை உருவாக்கியது இதற்குச் சான்றாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

சமூக நீதி, ஊழல் ஒழிப்பு, அமைதி, மனித வாழ்வின் தூய்மை ஆகிய துறைகளில் திருச்சபை ஆற்றி வரும் பணிகளையும், இன்னும், ஏழைகள், குடியேறிகள், கைதிகள், நோயாளிகள் ஆகியோருக்கான அதன் சேவைகளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

மத்திய அமெரிக்காவில் நிலையான தன்மையை உருவாக்குவதில் பானமா நாடு எடுத்து வரும் முயற்சிகளையும் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.