2009-10-30 16:52:30

நவம்பர் 2 - மரித்தோர் நினைவு நாள்.


நவ. 02. கல்லறைகள் வாழ்பவர்களுக்கான படிப்பினைகளைத் தாங்கி நிற்கும் கருவறைகள். அப்படிப்பட்ட கல்லறையொன்றில் என்னைக் கவர்ந்த கவிதையைத் தருகிறேன்.

"கல்லறைக்குள் அடங்கிய உன் சுவாசம்

கருவறை வாசமாய் நினைவில் நிதம் ஆடும்.

கால உளி தந்த மனவலிகள் கண்ணீரில் கரையும் முன்

உன் நினைவு தரும் சுகங்களில் மட்டுமே

எம் குறைகள் குணம் பெறும்."

ஆம். ஆழமான வார்த்தைகள். நினைவுகளில்தான் வாழ்கின்றோம். அந்த நினைவுகளால் தான் குணம் பெறுகின்றோம். அந்த இறந்தோர்களை எண்ணித்தான் நாம் வாழப் பழகுகின்றோம்.

சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான், உலகிலேயே அதிசயமான விடயம் எதுவென்று. குரு சொன்னார்: தன் கண் முன்னாலேயே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும், தான் மட்டும் இறக்க மாட்டோம் என்பது போல் மனிதர் வாழ்வதே, உலகின் அதிசயமான விடயம் என்று.

நவம்பர் 2 . இறந்த விசுவாசிகளை நாம் நினைவுகூரும் நாள். ஆனால், நாமும் ஒருநாள் இறப்பைச் சுவைப்போம் என்று அன்றாவது நாம் எண்ணிப் பார்ப்பது உண்டா?

அந்த உண்மை நம்மைத் தொடுவதுண்டா?

ஒரு ஞானி சொல்வார்: "வாழ்க்கை என்பது ஒரு பாலம், இதை கடக்க மட்டுமே முடியும். அங்கேயே யாரும் வீடு கட்டி தங்கிடல் இயலாது."

என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜாவின் மணம் மாறுவதில்லை. இயல்புகள் என்பவை இருப்பவை, இயற்பெயரையும் தாண்டி வாழ்பவை. ஆம். நவம்பர் 2 ஆம் தேதியை, சகல ஆன்மாக்கள் தினம், உத்தரிக்கிற ஸ்தல ஆத்மாக்கள் தினம், மரித்தோர் தினம், இறந்தோர் தினம் என பல பெயரிட்டு அழைத்து, தற்போது கல்லறைத் திருவிழா எனக்கூட அழைக்கிறோம். இருப்பினும் நோக்கம் ஒன்றுதான், மூலமும் ஒன்றுதான்.

வெற்று கல்லறையில் வேரூன்றி, ரோமையின் சுரங்கக் கல்லறைகளில் பாதுகாக்கப்பட்ட கிறீஸ்தவ நம்பிக்கையின் தொடர் விழா இது. இறப்பு என்பது முடிவதற்கோ, மடிவதற்கோ அல்ல, வாழ்வாய் விடிவதற்கு என்பதை நம்புவதாலேயே இந்த விழா.

வாழ்வின் முடிவற்ற பயணத்தில், நின்று நிதானித்து இளைப்பாறக் கிடைத்த ஒரு வாய்ப்பின் விழா. நாம் கல்லறைகளுக்காக வாழவில்லை, அது திறந்துவிடும் கதவுகளுக்காய் வாழ்கிறோம் என்பதைக் காட்டும் விழா.

மயானத்துடன் முடிவதாய்த் தெரிவது வாழ்க்கை அல்ல, அது வெறும் மாயை.

உலகா, உயிரா, உறவா, வாழ்வா... எது நிரந்தரம்? கல்லறைகளைக் காணும் போது, கண்முன் வாழ்ந்தவர்கள் மடியும் போது, காரண காரியங்கள் அறியமுடியாமல் திக்குமுக்காடும்போது கேள்விமேல் கேள்விகள் நெஞ்சக்கதவைத் தட்டி சோர்வுறும்போது, நிலையற்ற வாழ்வின் ஒலிகள் கேட்பதில்லையா? எதுதான் நிரந்தரம்?

மனிதன் மண்ணில் மடிந்து காணாமர்போவதற்கென பிறப்பெடுத்தவன் அல்ல.

மண்ணுக்குள் மடியும் குப்பைகள் கூட உரமாய் உருப்பெறுவதில்லையா? மெழுகுதிரிகளும் கசிந்துருகி காணாமற்போய் தியாகச் சுடராய் நிலைப்பதில்லையா? மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா?

இலையுதிர்காலமாய் கல்லறைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.

மண்ணே ஒரு மௌனம், அதற்குள்ளேயே எத்தனை மௌனங்கல் முடங்கிப் போய் கிடக்கின்றன?

மன ரணங்கள் தந்த மரணங்களின் சாட்சிகள் அவை. கருங்கல் சமாதிகளைக் கண்ணீர் விட்டு கழுவுகிறோம்.

நம் காயங்கள், மனக் காயங்கள் என்ன சொல்கின்றன? கல்லறையில்லா உலகைக் கனவு காண்கின்றனவா?

மரணம் இல்லா மாற்று வாழ்வுக்குத் துடிக்கின்றனவா?

மரணம் மரித்தாலே உயிர்கள் சிறக்கும்.

ஆம் மரணம் குறித்த நம் தப்பெண்ணங்கள் மரித்தால் மட்டுமே வாழ்வு நிலைபெறும் நமக்குள்.

கொஞ்சம் எண்ணிப்பார்ப்போம்.

மனித இயல்பின் பகையா மரணம்?

இயல்புவாழ்வுக்குச் சாவென்பது வன்முறையா?

வெறுமையை, ஏகாந்தத்தை விட்டுச் செல்வது மரணமா?

தாமதப்படுத்தியும், தவிர்க்கமுடியாத ஓர் எதார்த்தத்தை என் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்?

இந்த உலகே சதம் என நாம் தொடரத்தான் முடியுமா?

நம் பெயரையும் புகழையும் எடுத்துக்கொண்டுதான் போக இயலுமா?

பொருளும், உறவும் நம் கூட துணை வருமா? இல்லையே.

நாம் விட்டுச் செல்ல ஒன்றிருக்கிறது. நாம் வாழ்ந்தோம் என்ற அடையாளம். பிறர் வாழ்வில் பொறிக்கப்படும் அடையாளம். பிறருக்காய் வாழ்வதில் நாம் விட்டுச்செல்லும் அடையாளம். அதுபோதும்.

அது சொல்லும் நாம் கல்லறைக்கே வாழவில்லை, கடவுளுக்கே வாழ்கிறோம் என்று. 








All the contents on this site are copyrighted ©.