2009-10-27 18:13:44

விவிலிய தேடல்


இயேசுவின் புதுமைகளில் அவர் தனிப்பட்ட ஒருவரைக் குணமாக்குவது புதுமையின் ஒரு பகுதி... ஒரு சிறு பகுதி என்று கூடச் சொல்லலாம்.
ஆனால், அந்தப் புதுமை நடந்த சூழல், புதுமையில் கலந்து கொண்டவர்கள், புதுமை நடப்பதற்கு முன் இருந்த நிலைமை, நடந்தபின் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை புதுமையின் முக்கிய பகுதி... இவைகள்தாம் நமக்குப் பாடங்கள் பல சொல்லித்தரும்.
இன்றையப் புதுமையின் நாயகன் இயேசு. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்தப் புதுமையின் மற்றொரு நாயகன் - நூற்றுவர் தலைவன். "சொல் ஒன்று பேசும், என் இறைவா... என் ஊழியர் குணம்  பெறுவார்." என்று அந்தத் தலைவன் சொன்ன வார்த்தைகள் கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், திருப்பலியில், தினமும் சொல்லப்படும் ஒரு செபமாக இருந்து வருகிறது. புதுமையைக் கூறும் நற்செய்தியைக் கேட்போம்.

லூக்கா, 7: 1-10 
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.” இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

மத்தேயு, லூக்கா இருவரும் இயேசுவின் மலைப் பொழிவைத் தொடர்ந்து இந்தப் புதுமையைக் கூறியுள்ளனர். மலைப் பொழிவில் இயேசு சொன்ன அற்புதமான, ஆழமான உண்மைகளுக்கு நடைமுறையில் தரப்படும் ஒரு உதாரணமாக இந்தப் புதுமை அமைகிறதோ? அப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம். புதுமையின் இரண்டாவது நாயகன் நூற்றுவர் தலைவனைப் பற்றி நமது முதல் சிந்தனைகள்.
இவரைப் பற்றி நற்செய்தி சொல்லும் விவரங்களைப் பட்டியலிடுவோம்:

இந்த குணங்களையெல்லாம் உணர்ந்த இயேசு அவருக்குத் தரும் நற்சான்றிதழ் இது: "இஸ்ராயலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை."
ரோமைய படையில், நூற்றுவர் தலைவர் என்பது முதல் குறிப்பு. ரோமைய அரசில் சாதரண படைவீரனாக இருக்கும் ஒருவர், பல்வேறு திறமைகளின் அடிப்படையிலும், முக்கியமாக ரோமையப் பேரரசின் மீது அவருக்கு உள்ள விசுவாசத்தின் அடிப்படையிலும் படிப்படியாக பதவிகளில் உயர்ந்து நூற்றுவர் தலைவர் ஆகிறார். போர்க் காலங்களில் எதிரிகளைத் தாக்குவதிலும், எதிரியின் கோட்டைகளில் ஏறிச் செல்வதிலும் முதல் வரிசையில் இருப்பவர் இவர். இக்காரணங்களால், ஒவ்வொரு போரிலும் நூற்றுவர் தலைவர்கள் பலர் கொல்லப்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், உயிருக்குப் பயந்தவர்கள் இல்லை இவர்கள். நமது நாயகன் உயிருக்கு மட்டுமல்ல, தன் பதவிக்கும் பயந்தவரல்ல. எப்படி சொல்கிறோம்? பதவியைப் பற்றி பயப்படாததால்தான், ரோமையராகிய இவர் யூதரான இயேசுவிடம் உதவி கேட்டு வருகிறார்.
பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தார். இது அவரைப் பற்றிய இரண்டாம் குறிப்பு. உயர் பதவியில் இருப்பவர்கள் மத்தியில் ஒரு அரிதான குணம் இது. பணியாளர் மீது இரக்கம், அன்பு கொண்டவர்களைப் பார்ப்பது எளிது. ஆனால், பணியாளர் மீது மதிப்பு கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. மற்றவர்களை மதிக்கக் கூடிய பக்குவம், அதுவும் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவரை மதிக்கக் கூடிய பக்குவம் யாருக்கு வரும்?
தன்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், தங்களது பலன்களையும், பலவீனங்களையும் அறிந்து ஏற்று கொண்டவர்கள், தன்னைப் பற்றிய ஒரு நிறைவான, திருப்தியான எண்ணம் கொண்டவர்கள்... இவர்கள் தாம் மற்றவரை உண்மையில் மதிப்பார்கள்.
அடுத்தவர்களைப் போட்டியாக நினைக்கும் போது மதிப்பு குறையும், அவர்களைப் பற்றிய பயம் எழும். உயர் நிலையில் இருப்பவர்கள் இந்த பயத்தை வெளிக்காட்டாமல், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் குறை காணவும், அவர்களை மட்டம் தட்டும் திட்டங்களில் ஈடுபடவும் ஆரம்பிப்பார்கள். இவர்கள் தங்களையும் மதிக்காமல், மற்றவரையும் மதிக்காமல், வாழ்க்கையையே மிதிப்பவர்கள்.
நூற்றுவர் தலைவர் தன்னைச் சரியாக உணர்ந்திருந்ததால், தன்னைச் சரியாக மதித்ததனால், மற்றவர்களையும் மதித்தார். அதிலும் சிறப்பாக அவருடைய பணியாளரை அவர் மதித்தார் என்பதை அறியும் போது, அவருக்கு கோவில் கட்டி கும்பிடலாமோ என்று தோன்றுகிறது. அவர் கோவில் கட்டினார். தனக்காக அல்ல. யூதர்களுக்குத் தொழுகைக் கூடம் கட்டினார். நற்செய்தியில் நூற்றுவர் தலைவரைப் பற்றி காணக் கிடக்கும் மூன்றாவது குறிப்பு.
தன்னைப் பற்றி நன்கு அறிந்தவர், உணர்ந்தவர் என்பதன் வெளிப்பாடுதான் இந்தச் செயலும். ஏனைய ரோமையர்களைப் போல், யூதர்களையோ, அவர்களது கடவுளையோ தனக்குப் பகையாக, போட்டியாக நினைக்காமல், அவர்களை மதித்தார். அவர்களுக்குக் கோவில் கட்டித் தந்தார்.
ஒரு சிலர் கோவில் கட்டுவர், அல்லது, ஏற்கனவே கட்டப்பட்ட கோவிலைப் புதுப்பிப்பர். இதை அவர்கள் செய்வதற்கு ஒரே காரணம்... அதன் வழியாக, தங்கள் பெருமைக்கு ஒரு கோவிலைக் கட்டிக் கொள்வதுதான்.
மக்கள் மனதில், நினைவில் இடம் பிடிக்க மன்னர்களும், தலைவர்களும் மேற்கொண்ட பல பரிதாபமான முயற்சிகள் நமக்கெல்லாம் தெரிந்தது தானே. சிலைகள் என்ன, அவர்கள் பெயர் தாங்கிய கட்டிடங்கள் என்ன... பாவம்.
நூற்றுவர் தலைவர் யூதர்களுக்குக் கட்டிக் கொடுத்த தொழுகைக் கூடத்தில் அவரது பெயரைப் பொறித்திருப்பாரா? சந்தேகம் தான். அவரது மற்ற குணநலன்களைப் பார்க்கும் போது, இப்படி செய்திருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தற்புகழை விரும்பாத இவர், யேசுவைத் தன் வீட்டுக்கு வரவழைக்கப் பயன்படுத்திய முறையும் சிந்திக்கத் தகுந்தது. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு சிறு படை, தேர் இவைகளை அனுப்பி இயேசுவை தன் வீட்டுக்கு கொண்டு வர முயற்சித்திருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால், இயேசு சென்றிருப்பாரா? சக்தி, அதிகாரம் இவற்றிற்கு கொஞ்சமும் இடம் கொடாத இயேசு, அதிகாரத் தோரணையில் அழைக்கப்பட்டிருந்தால் போயிருக்க மாட்டார்.
தாகூர் எழுதிய "This is my prayer to Thee " என்ற ஒரு கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "Give me the strength never to disown the poor or bend my knees before insolent might " "இறைவா, இதுவே என் ஜெபம்" என்று ஆரம்பிக்கும் தாகூரின் வேண்டுதல்களில் ஒன்று: "தன்னிலை மறந்து தலைகனம் மிகுந்தோரின் சக்திக்கு முன்னால் நான் ஒரு போதும் முழந்தாள் படியிட்டு பணியாத வரம் வேண்டும்." 
இயேசுவைப் பற்றி ஓரளவு கேள்விபட்டிருந்த தலைவர், இவைகளை உள்ளூர உணர்ந்திருப்பார். எனவேதான் தனது யூத நண்பர்கள் மூலம் அந்த அழைப்பை அனுப்புகிறார். விண்ணப்பம் யார் வழியாகச் சென்றாலும் பரவாயில்லை. தன் பணியாளர் நலம் பெற வேண்டும்... அதுதான் முக்கியம்.
இயேசு அவர் வீட்டுக்கு போகும் வழியில் நூற்றுவர் தலைவர் இன்னும் சில நண்பர்கள் மூலம் அனுப்பிய செய்தி அர்த்தமுள்ள பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன. அந்த வார்த்தைகளை மீண்டும் அசை போடலாம்: “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர்.”
என் இல்லத்திற்கு நீர் வர நான் தகுதியற்றவன். "எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவீங்களா?" என்று ஒரு சிலர் என்னிடம் சொல்லும் போது, அதை உண்மையான ஏக்கம் என்பதா அல்லது மறைமுகமான கேலி என்பதா... தெரியாது. மறைமுகமான ஒரு அழைப்பு அது. நூற்றுவர் தலைவர் அனுப்பிய செய்தியில் மறைமுகமான, போலியான தாழ்ச்சி கிடையாது. அவர் தலைவராக இருந்ததால், பிறரது நேரத்தின் அருமை தெரிந்திருக்கும். தான் கூப்பிட்ட குரலுக்கு மற்றவர்கள் ஓடி வந்து பணிவிடை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதையும் அந்த கூற்றில் சொல்லிக் காட்டுகிறார்.
அவர் அனுப்பிய செய்தியை இப்படியும் சொல்லலாம்: "ஐயா, நீங்க என் வீட்டுக்கு வந்துதான் என் ஊழியரைக் குணமாக்கனும்னு இல்ல. உங்க சக்திய நான் மனசார நம்புறேன். நீங்க இருந்த இடத்திலேயே ஒரு வார்த்தை சொன்னாப் போதும். அந்த வார்த்தையின் சக்தி பல நூறு மைல்கள் தாண்டி வரும்... அந்த வார்த்தையின் பலனை நாங்க உணர முடியும்."
ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியர் நலமடைவார்.
வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க இது ஒரு சந்தர்ப்பம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பொருள் உள்ளதாக, அதுவும் பிறருக்கு உதவும் சொல்லாக இருந்தால் மிகவும் நல்லது.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், நாம் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு, பின்னர் வருந்துவதில் பயனில்லை.
இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் வலிமை இருந்தது. நாம் பேசும் சொற்களுக்கு ஓரளவாகிலும் வலிமை உள்ளதா? அல்லது, நாம் பேசுவதில் பெரும்பாலானவை போலியான, வெறுமையான வார்த்தை விளையாட்டுக்கள் தாமா?
சொல் ஒன்று பேசும், என் ஊழியர் குணமடைவார்.
சொல் ஒன்று பேசும், நான் குணமடைவேன்.இயேசுவின் குணமளிக்கும் வார்த்தைகளைப் போல, நமது சொற்களும் நலமளிக்கும், மற்றவரைக் கட்டி எழுப்பும் சொற்களாக இருக்க இறைவனை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.