2009-10-24 17:54:56

ஞாயிறு சிந்தனை 


இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு இரு எண்ணங்களை மையமாக எடுத்துக்கொள்வோம். "பெயர் சொல்லி அழைப்பது", "பார்வை பெறுவது".
பத்து நாட்களுக்கு முன் வத்திக்கான் வானொலியின் விவிலியத்தேடலில் இயேசு சக்கேயுவை உரு மாற்றியப் புதுமையைப் பற்றி சிந்தித்தோம். ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது உண்டாகும் உருமாற்றங்களை அப்போது மேலோட்டமாகச் சிந்தித்தோம். இன்றைய நற்செய்தி பெயர் சொல்லி அழைப்பது பற்றி மீண்டும் ஒரு முறை சிந்திக்க வாய்ப்பு அளிக்கிறது. இயேசு பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு பார்வை தந்த புதுமையை நற்செய்தி கூறுகிறது. மாற்கு எழுதியுள்ள இன்றைய நற்செய்தியில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பார்வையற்ற அந்த பிச்சைக் காரரை மாற்கு பெயர் சொல்லி குறிப்பிட்டிருக்கிறார்.
நற்செய்தியைக் கேட்போம். சிந்தனையைத் தொடர்வோம்.

மாற்கு நற்செய்தி 10: 46-52
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

மத்தேயு, மாற்கு, லூக்கா என மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக இந்தப் புதுமை சொல்லப்பட்டிருக்கிறது. மாற்கு மட்டும், பார்வை இழந்த பிச்சைக்காரருக்குப் பெயர், முகவரி எல்லாம் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய புதுமைகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது. மற்ற புதுமைகளிலேல்லாம், பொதுவாக, முடவர், பார்வை அற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பில் தரப்படும் ஒரு முக்கிய அடையாளம் பெயர். நாம் அனைவரும் வாழ் நாள் முழுவதும் தாங்கிச் செல்லும் அடையாளம் இது. பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள். ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து பெயர் சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம் பெயர் சொல்லி அழைக்கும் இருள் சூழ்ந்த பக்கம்.
வளரும் போது, படிக்கும் போது, பலவிதமானப் பெயர்கள் நமக்குச் சூட்டப்படும். ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். உதாரணம்: மருத்துவத் தொழிலில் இருப்பவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதை விட "டாக்டர்" என்று சொல்லும்போது கூடுதலான மரியாதை. இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல் துறை கண்காணிப்பாளர்களை, teacher, professor, inspector என்றெல்லாம் அழைக்கும் போது சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். செய்யும் தொழிலே அவர்களது அடையாளங்களாகும்போது, அவர்கள் பெயர்களையே அவர்கள் மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிறப்பில் கிடைத்த அடையாளத்தை விட மேலான ஒரு அடையாளம் அவர்களுக்கு வந்து விட்டதே.
மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும் தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட மரியாதையான அடைமொழிகளால் அழைப்பது தான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். அவர்களது பணி, அவர்கள் வாழ்வில் அடைந்த நிலை இவைகளை மனதில் கொண்டு சொல்லப்படும் அடைமொழிகள்.
இதுவரை நாம் சிந்தித்தது பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிமயமான பக்கம். இனி சிந்திக்க இருப்பது இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகள் இவர்களுக்கு கிடையாது. அப்படியே அந்த அடைமொழிகளை பயன்படுத்தும் போது அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எல்லாருமே "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களுக்கு ஆளானவர்கள். இந்தியாவில், தமிழகத்தில் நாமாகத் தேடிக் கொண்ட மற்றொரு சாபம் நமது சாதி முறைகள். இதன் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.
நான் பணி செய்து வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஒரு இளைஞர் என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப்
 பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை. என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக் கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அவரை "சங்கர்" என்று அழைக்கும் போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது.
நான் தங்கியிருந்த குருக்கள் இல்லங்களில் எளிய பணி செய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்து போய் விடவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
வாழ்வின் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், முக்கியமாக, தாழ்நிலையில் இருப்பவரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது, உள்ளூர பல புதுமைகள் நடக்கும். முயன்று பார்ப்போம்.
பார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார். இயேசுவை உள்ளத்துக் கண்களால் "தாவீதின் மகன்" என்று பார்த்திருக்கிறார். இயேசுவுக்கு அவர் தந்த அந்த அடைமொழி இன்னும் சில நாட்களில் எருசலேம் நகரத்தில் எல்லாராலும் கூச்சலிட்டு சொல்லப்படும். "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்று எல்லாரும் பாடுவர். விவிலியத்தில் இந்த பட்டத்தை முதன்முதலில் ஏசுவுக்குத் தந்தது உடலளவில் கண் பார்வையற்று ஆனால் உள்ளத்தளவில் பார்வை பெற்ற பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்க முடியும்.
கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் இருந்த ஹெலன் கெல்லெர் கூறிய அழக்கான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில் மிக அழகானவைகளைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."
அகக்கண் கொண்டு பார்க்கும் விந்தையைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. இதோ இன்னொரு கதை. மருத்துவ மனை ஒன்றில் இருவர் ஒரே அறையில் தங்கி இருநதார்கள். இருவரும் ஏறக்குறைய படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். இவ்விருவரில் ஒருவருடைய படுக்கை ஜன்னலுக்கு அருகில் இருந்தது. அவர் ஒவ்வொரு நாள் மதியமும் மிகவும் சிரமப்பட்டு தன் படுக்கையில் எழுந்து ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும் ஜன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு தடாகத்தில் நீந்தி வரும் நாய்குட்டிகள் என்று அவர் வர்ணனை ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்து வரும் அவர் அந்த ஒரு மணி நேரம் கண்களை மூடி, அடுத்த படுக்கைகாரர் சொல்லும் வர்ணனை வழியாக வெளி உலகத்தைப் பார்த்தார்.
இது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, ஜன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்திய இரவு தூக்கத்திலேயே அமைதியாக அவர் இறந்து போனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே அவர் வர்ணனை வழியே தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம் மூடப்பட்டுவிட்டதே என்று இன்னும் அதிக வருத்தம். அடுத்த நாள், நர்ஸிடம் வேண்டி கேட்டு, தன்னை அந்த ஜன்னலருகே இருந்த படுக்கைக்கு மாற்ற சொன்னார். மாற்றப்பட்டார். மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்." என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். ஜன்னல் வழியே பார்த்தார். அவருக்கு அதிர்ச்சி. ஜன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை.. ஒன்றும் இல்லை. அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த நர்ஸ் அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர் எப்படி இந்த படுக்கையில் இருந்தவர் ஜன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்ட நர்ஸ் சொன்ன செய்தி அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. இதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர் அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏன்? அவருக்கு பார்வைத்திறனே கிடையாது. நர்ஸ் சொன்னது அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. அவர் அழகான ஒரு உலகத்தைப் பார்க்க கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.
பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். ஜன்னலை வைத்து இன்னொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வருகிறார்கள். தினமும் அந்த பெண்மணி, காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி, அல்லது வீட்டு வேலை செய்யும் பெண் தினமும் துணிகளைக் காய வைப்பதைப் பார்ப்பார்.
கணவனிடம் முறையிடுவார்: "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." முறையீடுகள் 3 நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் ஜன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்." கணவன் வந்ததும் மனைவி சொன்னார்: "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு." என்று வியந்து பாராட்டினார்.
கணவன் அமைதியாக : "அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்." என்று சொன்னாராம்.
 பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும் இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.