2009-10-19 15:37:46

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்


அக்.19,2009 எனது நண்பருக்கு ஔவையின் வாக்குகள் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி ஆலயம் செல்லாதவர். ஒருநாள் அவரிடம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று ஔவை மூதாட்டி சொல்லியிருக்கிறாரே என்ற வரிகளை அவிழ்த்து விட்டேன். அடுத்த நாளே அவர் ஆலயம் சென்றதையும் அங்கு நடந்ததையும் பகிர்ந்து கொண்டார். அன்பு நேயர்களே, நீங்களும் கேளுங்கள்.

நான் ஆலயத்திற்கு வெளியே காலணியைக் கழற்றி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் எனது கையை பிடித்தது போல் உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன். ஏழ்மையைப் பறைசாற்றும் உருவம் கொண்ட ஏழு வயதுச் சிறுவன், “பசிக்கிதுங்க, தர்மம் போடுங்க சாமி” என்றான். ஒருகணம் மனது இரங்கினாலும், மறுகணம் எனது உள்மனம் கூடாது என்று சொன்னதால் அவன் கையை உதறித் தள்ளிவிட்டு கோவிலினுள் சென்று பக்தியுடன் பிரகாரத்தைச் சுற்றத் தொடங்கினேன். அப்போதும் ஒரு குரல். ஐயா... என்றது. மீண்டும் அதே ஏழைச் சிறுவன். உடனே எரிச்சலுடன் எனது நடையை மிகவும் எட்டிப்போட்டேன். சனியன், தரித்திரம் விடமாட்டேங்குது. சிறுவனின் தொந்தரவால் எனது மனம் பக்தியில் இலயிக்க மறுத்தது. ஒருவழியாய்க் காலணிகளைக் கழற்றி வைத்த இடத்தை அடைந்தேன். மீண்டும் அதே குரல். ஐயா... என்றது. கோபம் பொங்க, ஓங்கி அறையக் கைகளை உயர்த்தியபடி திரும்பினேன். அப்போது அச்சிறுவன், நீட்டிய கையுடன், “ஐயா.... இந்தாங்க உங்க மோதிரம். கீழ விழுந்திருச்சு” என்று கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். ஆனால் நானோ என்னை நினைத்து வெட்கிச் சிலையாய் நின்றேன்.

அன்பர்களே, நண்பர் சொன்னார்: “இல்லாமை எனும் ஏழ்மை அவன் உருவத்தில். அறியாமை எனும் ஏழ்மை என் மனத்தினில்” என்று. ஏழ்மை ஒரு சாபக்கேடு என்று சிலர் நொந்து கொள்வதைக் கேட்டிருக்கிறேன். இன்றைய தாராளமயமாக்கப்பட்ட உலகில் ஏழைகளுக்கும் செல்வந்தருக்கும் இடையேயான இடைவெளி அகன்று கொண்டே போகிறது. தமிழகத்தில் 21 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. ஐ.நாவின் மில்லேனய வளர்ச்சித் திட்ட இலக்கின்படி 2015ம் ஆண்டுக்குள் உலகில் ஏழ்மையை பாதியாகக் குறைக்க வேண்டும். ஆனால் அது எட்டாக்கனியாகவே இருக்கின்றது என்ற கவலையும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 16, கடந்த வெள்ளியன்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் 64வது உலக உணவு தினத்தை கடைபிடித்தது. அதையொட்டி அந்நிறுவனம் அனுசரித்த உலக உணவு வாரத்தில் உரையாற்றிய அந்நிறுவன இயக்குனர் ஜாக் தியோப், இந்த 2009ம் ஆண்டில் பசியினால் வாடும் மக்களின் எண்ணிக்கை 10 கோடியே 50 இலட்சமாக அதிகரித்திருப்பதோடு 102 கோடிப் பேர் ஊட்டச்சத்தின்றியும் உள்ளனர். அதாவது மொத்த உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய ஆறில் ஒரு பகுதியினர் பசியினால் துன்புறுகின்றனர். இதனால் ஒவ்வோர் ஆறு வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது என்று அறிவித்தார். வருகிற நவம்பர் 16 முதல் 18 வரை உரோமையில் நடைபெறவிருக்கின்ற உணவுப் பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள் வறுமையை அகற்றுவதற்கு விரைவான, விரிவான, முழுமையான ஒரு தீர்மானத்திற்கு வருமாறு வலியுறுத்தினார்.

இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் உலக மக்கள் தொகை, ஏறத்தாழ தொள்ளாயிரம் கோடியாக உயரவுள்ளவேளை, இவர்களைப் போஷிப்பதற்கான உணவுப் பொருட்கள் உற்பத்தி இரண்டு மடங்காக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா.உணவு திட்ட அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கின்றனர். மேலும் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று FAO எப்ஏஓ தெரிவித்திருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் வறுமைக்கு முக்கிய காரணம் என்று குறைகூறப்பட்டு வருவதற்கு அண்மையில் ஐ.நா.வின் 64வது பொது அவையில் மறுப்பு தெரிவித்த ஐ.நா.வுக்கான நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே, இதற்கான உண்மையான காரணம் பொறுப்பற்ற அரசியல்வாதிகளும், பொறுப்பற்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகளுமே என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், இந்த உலக உணவு தினத்தை முன்னிட்டு தியோப்புக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலகில் வறுமையை அகற்றுவதற்கு வாழ்வதற்கான உரிமை ஊக்குவிக்கப்பட வேண்டும், இதற்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். இக்காலத்திய பொருளாதார பிரச்சனையில் வேளாண் தொழிலாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த உலக தினத்திற்கு மறுநாளான அக்டோபர் 17 ம் தேதி, ஏழ்மையை அகற்றுவதற்கான உலக தினமாகும். உலக வங்கியின் கணிப்புப்படி, 2005ம் ஆண்டில், வளரும் நாடுகளில் 140 கோடிப் பேர் கடும் வறுமையில், அதாவது ஒரு நாளைக்கு ஒன்னேகால் டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்கின்றனர். உலகப் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது ஐந்து கோடிப் பேர் வேலை இழந்துள்ளனர். இவ்வாண்டில் ஏறக்குறைய மேலும் 10 கோடிப் பேர் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழ் வாழும் நிலை உருவாகும் என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவன இயக்குனர் Chifa Tekaya வின் செய்தி கூறுகிறது. “வறுமைக்கு எதிராகச் சிறாரும் குடும்பங்களும் பேசுகின்றன” என்ற தலைப்பிலான இவ்வுலக தினம், நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகப் பள்ளியில் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டன. அதில் சிறாருக்கு உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், வறுமையினால், ஏழு கோடிச் சிறார் பள்ளிக்குச் செல்ல வசதியின்றி இருக்கின்றனர், 100 கோடிப் பேர் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர், எனவே ஏழ்மையை அகற்றுவதில் சிறாருக்கு இருக்கும் கடமைகளைச் சுட்டிக் காட்டினார்.

உலகம் வெப்பமயமாகி வருவதால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை, வெள்ளம் என மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடிபரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்தியா வேகமாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறது என்று பெருமிதம் அடைகின்றனர் தலைவர்கள். ஆனால் நாட்டின் வறுமை ஒவ்வொரு நாளும் நமது முகத்தில் வந்து அறைகிறது. எப்படி? இரயில் பெட்டிகளில் ஊர்ந்து ஊர்ந்து வந்து தன் சட்டையால் தரையில் கிடக்கும் குப்பைகளைத் திரட்டி விட்டுப் பயணிகளிடமிருந்து சில்லறைக் காசுகளை வாங்கிச் செல்லும் பையன்கள். சாப்பாட்டுக் கடைகளில் மேசைத் துடைக்கத் துணியோடு வந்து நிற்கும் அழுக்குச் சட்டைச் சிறுவர்கள். வேகாத வெயிலில் குழந்தையை சாலை ஓரம் தொட்டிலில் போட்டு விட்டுச் சாலை போடும் வேலை செய்யும் பெண்கள். வீட்டு வேலை செய்ய ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வரும் பெண்கள். சாலை நிறுத்தங்களில் ஓடி ஓடி வந்து பிச்சை எடுக்கும் மற்றும் வண்ணத் துணிகள் விற்கும் குழந்தைகள். சாக்கடையருகில், அழுகிய காய்களையும் தரக்குறைவான அரிசியையும் பயன்படுத்திச் செய்த உணவுகளை வாங்கி உண்ணும் உழைப்பாளிகள்.

ஜி-8 என்ற தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இத்தாலி நாட்டுத் தலைநகரான இந்த உரோமை மாநகரில்கூட, பெரிய கட்டிடங்களின் படிகளில், மழையிலும் கடும் குளிரிலும் தூங்குவோர், சாலைகளில் அமர்ந்து பிச்சை எடுப்போர், இரயில்களிலும் பொது இடங்களிலும் கையேந்துவோர் என சில மனதை வருத்தும் காட்சிகளைக் காண முடிகின்றது. நேயர்களே, இந்தக் காட்சிகள் என்று நம் கண்களிலிருந்து மறைகின்றனவோ அன்றுதான் நாடுகளில் வறுமை ஒழிந்து விட்டது என்று பெருமூச்சு விடலாம்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். இனத்தால், மதத்தால், மொழியால் ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகம் உருவாக வேண்டும். இதுவே நமது தீர்க்கமான ஆசை.

இந்த நேரத்தில் இதையும் சிந்திக்கலாமே. “ஏழ்மையின் மூலதனம் திறமை” என்றார் எம்ல்ரென். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு எரிமலை வெடித்துத் தீப்பிழம்பாகக் கக்கியது. அந்த எரிமலை வெடித்ததன் சாம்பல், மைல் கணக்கில் கிடந்தது. அப்பகுதியில் முன்பு குடியிருந்த ஓர் ஆள் பிழைப்புக்காக வேலை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு யோசனை உதித்தது. எரிமலைச் சாம்பலை வைத்து ஒரு விளம்பரம் கொடுத்தார். “இந்தச் சாம்பல் இலேசானது. உலக அதிசயம். உங்கள் வீட்டில் இருக்கிறதா” என்பதே அந்த விளம்பரம். சாம்பல் வியாபாரம் ஓஹோ என்று ஓடியது. வேலை தேடியவர் பிழைத்துக் கொண்டார்.

ஆம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. உழைக்க மனமிருந்தால் மண்ணையும் பொன்னாக்கலாம். வறுமையின் இருளுக்கும் தோல்விக்கும் விடை கொடுத்து, சோதனைக்கும் சோர்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அந்தச் செயலே, உங்களை உள்ளதைக் கொண்டு உன்னத நிலையை அடையச் செய்யும். உங்களது சொல், செயல், சிந்தனை அனைத்தையும் இலட்சியம், வெற்றி எனும் கதிரவனை நோக்கி நடத்தும்







All the contents on this site are copyrighted ©.