2009-10-17 17:50:36

திருச்சபையின் மறைப்பணி கிறிஸ்தவரல்லாதவர், குறிப்பாக மிக ஏழைகள், தலித்துகள், பூர்வீக இனத்தவர் ஆகியோரை நோக்கியதாக இருக்க வேண்டும், ராஞ்சிப் பேராயர்


அக்.17,2009 திருச்சபை இயல்பிலே மறைபோதகத் தன்மை கொண்டது, அதன் மறைப்பணியானது கிறிஸ்தவரல்லாதவர், குறிப்பாக மிக ஏழைகள், தலித்துகள், பூர்வீக இனத்தவர் ஆகியோரை நோக்கியதாக இருக்க வேண்டுமென ராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ கூறினார்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவின் முதல் மறைபோதக மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் டோப்போ, இந்தியாவை ஒளிரச் செய்வது, நாட்டிலுள்ள ஏறக்குறைய ஒரு கோடியே எண்பது இலட்சம் கத்தோலிக்கரின் கடமை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இந்திய சமுதாயத்தில் எப்பொழுதும் தவறாகப் பயன்படுத்தப்படும் மற்றும் நசுக்கப்படும் தலித்துகள் மற்றும் பூர்வீக இனத்தவரை நோக்கியதாக திருச்சபையின் மறைப்பணி இருக்க வேண்டுமென்று கூறிய அவர், இம்மாநாடு கத்தோலிக்கரில் புதுமாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

"Prabhu Yesu Mahotsav" அதாவது “ஆண்டவர் இயேசு மாபெரும் விழா” என்ற பெயருடன் கடந்த புதனன்று தொடங்கிய இம்மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவு பெறுகின்றது. இதில் இந்தியாவின் 160 மறைமாவட்டங்களிலிருந்து சுமார் 1500 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக என்ற தலைப்பில் இடம் பெறும் இந்த முதல் இந்திய மறைபோதக மாநாடு, 2006ம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மறைபோதக மாநாட்டின் தொடர்ச்சி என்பது கவனிக்கத்தக்கது







All the contents on this site are copyrighted ©.