2009-10-17 18:10:49

ஞாயிறு சிந்தனை 


நாற்காலி, சிலுவை இரண்டையும் இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

இரண்டும் அரியணைகள். நாற்காலி என்ற அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. நாற்காலிக்கு இன்னும் மவுசு அதிகம். சிலுவைக்கு?...

இறை வார்த்தை சபையைச் சார்ந்த ஜான் புல்லன்பாக் (John Fullenbach) என்ற குரு தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்கிறார். ரோமையில் இறையியல் ஆசிரியராக இருக்கும் ஜான், அன்னை தெரசா உயிரோடிருந்த போது, கொல்கத்தா சென்று அன்னையுடன் பணி செய்ய விரும்பினார். அன்னையும் அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் பணியை ஆரம்பித்த முதல் நாள் ஒரு அருட்சகோதரியுடன் கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது. அந்தப் பகுதியில் உடல் நலம் மிகவும் நலிந்த ஒரு வயதானப் பெண்மணி அவர்களிடம், "தயவு செய்து என் வீட்டுக்கு வாருங்கள். என் கணவர் சாகக் கிடக்கிறார்." என்று வேண்டினார். ஜானும் அந்த சகோதரியும் மிகவும் அழுக்காய் இருந்த ஒரு குடிசைக்குள் சென்றனர். அங்கே பல நாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரைக் கண்டனர். ஜானுக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்வளவு மோசமான நிலையில் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று... அவ்வளவு நாற்றம் அங்கே. அவரைத் தங்கள் இல்லத்திற்கு கொண்டு செல்லலாம் என்று சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்க முயன்ற போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மனிதர் ஜான் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம் ஜானைத் தாக்கின. ஓரளவு சமாளித்துக் கொண்டு அந்த மனிதரை அன்னையின் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்தார். தொடர்ந்து அவர் அங்கே தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள் பல உண்மைகளைச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.

அன்னை தெரசாவும், பிற சகோதரிகளும் செய்த சேவை அவரை அதிகமாய்ப் பாதித்தது. அதைவிட, அந்த நோயாளிகளில் சிலர் சகோதரிகள் மீதும், அன்னை மீதும் கோபப்பட்டு, பேசிய வார்த்தைகள், நடந்து கொண்ட விதம்... இவைகளை அந்த சகோதரிகள் சமாளித்த அழகு... இவை அனைத்தும் அவரது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியகக் கூறுகிறார்.



அன்னை தெரசாவின் சேவையைப் பார்வையிடவும், அவரோடு சேர்ந்து பணி செய்யவும் நூற்றுக்கணக்கானோர் கொல்கத்தா சென்றிருக்கின்றனர். ஒரு முறை, அன்னையுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: "எனக்கு யாராவது பத்தாயிரம் டாலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: "நானும் அப்படித்தான். பத்தாயிரம் டாலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம்.

இப்படி பணி செய்த அன்னை தெரசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை வரலாறு மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர்.



“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.”

இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. பணியாளர் தலைமைத்துவம் (Sevant Leadership) என்பது அண்மையில் பல மேலாண்மை (business) பள்ளிகளில் பேசப்படும் ஒரு கருத்து.

நமது சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் கி.மு. 4 ம் நூற்றாண்டிலேயே இதைப் பற்றி கூறியுள்ளது:

"மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதைச் செய்வது தான், மன்னனுக்கு நன்மை. தன்னை மட்டும் மகிழ்விக்கச் செய்வது நன்மை அல்ல."

"மன்னன் ஊதியம் பெறும் ஒரு ஊழியன். மக்களோடு சேர்ந்து நாட்டின் வளங்களை மன்னன் அனுபவிக்க வேண்டும்.

"The king shall consider as good, not what pleases himself but what pleases his subjects. The king is a paid servant and enjoys the resources of the state together with the people."

கி.மு. 6 அல்ல்து 5 வது நூற்றாண்டுகளில் சினாவிலும் இது போன்ற எண்ணங்கள் பேசப்பட்டு வந்தன. Tao Te Ching என்ற நூலில் Lao Tzu எழுதிய ஒரு கருத்து: "மிகச் சிறந்த தலைவர் யாரென்றால், அவர் இருப்பதையே மக்கள் உணராத வண்ணம் செயல்படுபவர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள தலைவரை மக்கள் விரும்புவர், போற்றுவர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள தலைவரைக் கண்டு மக்கள் அஞ்சுவர். இறுதி நிலைத் தலைவனை மக்கள் வெறுப்பர்.

எந்த ஒரு தலைவனுக்குக் கீழ் மக்கள் எல்லாருமே சேர்ந்து செயல்பட்டு வெற்றி பெற்ற பின் அந்த மக்களை 'நாம் இதை வென்றோம். நாம் இதை செய்து முடித்தோம்.' என்று அவன் சொல்ல வைக்கிறானோ, அந்தத் தலைவன்தான் உண்மை தலைவன்."

பணியாளர் தலைமைத்துவம் பற்றி விக்கிபீடியாவில் தேடிய போது Lao Tzu, சாணக்கியன் என்று வரலாற்றில் பலர் சொன்ன கருத்துக்களோடு, இயேசு இன்றைய நற்செய்தியில் சொன்ன கருத்துக்களும் உள்ளன.

இயேசு என்ற தலைவர் அவருடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய செயலும் பணியாளர் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அங்கு சொல்லப் பட்டுள்ளது.

விக்கிபீடியா தருவது மறையுரை சிந்தனை அல்ல. இன்று மேலாண்மை பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரப்படும் ஒரு கருத்து.

இந்த பணியாளர் தலைமைத்துவத்தில் பல அம்சங்கள் உள்ளன: பரிவோடு குறை கேட்பது, மற்றவரை உற்சாகப்படுத்துவது, மற்றவரின் திறமைகளை வெளிக் கொணர்வது... இப்படி ஏழு அம்சங்கள் பேசப்படுகின்றன. என்னை அதிகம் கவர்ந்த ஒரு அம்சம் - "Changing the pyramid" அதிகார அமைப்பை மாற்றுவது. வழக்கமாக, அதிகாரம் என்பது ஒரு சிலரிடமிருந்து வரும்... அவர்கள் சொல்வதைப் பல ஆயிரம் பேர் கேட்டு செயல்படுவர். எனவேதான் இதை ஒரு பிரமிடுக்கு ஒப்புமை சொல்வார்கள்.

இந்தப் பிரமிடைத் தலைகீழாக்க முடியுமா?

எகிப்தில் உள்ள பிரமிடைத் தலைகீழாக நிறுத்த முடியாது. ஆனால், ஒரு நிறுவனத்தில் நாமாகவே கற்பனை செய்து கொண்ட அதிகார பிரமிடை மாற்ற முடியும்.

தலைவர்கள், தொண்டர்கள்; அதிகாரி, ஊழியர்கள் என்று அழுத்தந்திருத்தமாய் பாகப்பிரிவினைகள் செய்வதற்கு பதில், அதிகாரத்தை எல்லாரிடமும் சமமாகப் பகிரும் போது, எல்லாரும் பொறுப்போடு பணியாற்றுவர், நிறுவனத்திற்கும் இது நல்லது.



11 வயதில் அந்த சிறுவன் பங்கு சந்தையில் ஈடுபட்டான். 14 வயதில் ஒரு சிறு கம்பெனியை ஆரம்பித்தான். இன்று தனது 79 வது வயதில், 63 பெறும் நிறுவனங்களுக்கு அதிபராக உலகின் பெரும் செல்வந்தர்களில் இரண்டாம் இடம் பிடித்திருப்பவர், வாரன் பபெட். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாழ்கிறார். எளிய வீடு, அரண்மனை அல்ல. தன் காரைத் தானே ஓட்டுகிறார். அவர் ஒரு விமான கம்பெனியை நடத்தினாலும், சொந்த விமானம் இல்லை... ஒரு செல்போன், ஒரு கம்ப்யூட்டர் இல்லாத இந்த மனிதர் - பல தலைவர்களுக்குப் பாடம்.



ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் இது. சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். பல அதிரடி மாற்றங்கள். நேர்மையாய் உழைக்கும் அதிகாரிகள், முதல்வர்களை வைத்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இவரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டனவோ என்று நான் எண்ணியதுண்டு. அப்படி நேர்மையாக, சிறப்பாக செயல் பட்டவர்.

ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக நடந்து போன போது, ஒரு இடத்தில் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: "என்ன பிரச்சனை?" "சாக்கடை அடைச்சிருக்கு, சார்." "அது தெரியுது. சுத்தம் பண்றதுதானே." "ஒரே நாத்தமா இருக்கு சார், எப்படி இறங்குறதுன்னு தெரியல." அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, "இப்படித்தான் செய்யணும்" என்று சொல்லி அவர் வழி போனார். சாக்கடை அடைப்பு திறந்தது, அவர்கள் வாயடைத்து நின்றனர்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை தெரசா ஒரு பெரிய தலைவரா? ஆம். கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர்.

வாரன் பபெட் பணத்தையே வாழ்க்கையில் தெய்வமாக வழிபடும் பல நிறுவன முதலைகளுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற ஒரு பெரிய செல்வந்தர்.

அரசு அதிகாரிகளும் நேர்மையாக, திறமையாக உழைக்க முடியும். அது வெறும் சினிமா கதை அல்ல என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியர்.

பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள். உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல் படவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல் வழி படுத்த வேண்டுவோம்.

நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம்.

நாம் மட்டும் சுகம் காணலாம் என்று அரியணை ஏறி அமர்ந்தால், சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை மதிக்க மாட்டார்கள். கட்டாயம் நேசிக்க மாட்டார்கள்.

ஆனால், பலருக்கும் சுகம் தருவதற்கு சிலுவை என்ற அரியணை ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ள முடியும்.
நாற்காலியா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுங்கள்.







All the contents on this site are copyrighted ©.