2009-10-17 17:53:46

கத்தோலிக்கத் திருச்சபைக்கும், பிரிந்த கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ உரையாடல் புதிய பரிமாணம் எடுத்துள்ளது, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை


அக்.17,2009 கத்தோலிக்கத் திருச்சபைக்கும், பிரிந்த கிறிஸ்தவ சபைகளில் முக்கிய மானவைகளான ஆங்லிக்கன், லூத்தரன், சீர்திருத்த மற்றும் மெத்தோடிஸ்ட் சபைகளுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ உரையாடல் புதிய பரிமாணம் எடுத்துள்ளது என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கூறினார்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை தயாரித்த, “கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை கூறுகள்” என்ற தலைப்பிலான நூலை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய கர்தினால் வால்ட்டர் காஸ்பர் இவ்வாறு கூறினார்.

இந்த 207 பக்க புத்தகம், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் முடிந்ததிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளில் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதன் பலன்கள் பற்றி விளக்கியுள்ளதாகக் கூறினார்.

மேற்கத்திய நாடுகளில் வருங்காலக் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து பேசுவதற்கென 2010ம் ஆண்டு பெப்ருவரியில் கத்தோலிக்கத் திருச்சபையும், பிரிந்த கிறிஸ்தவ சபைகளும் இணைந்து கருத்தரங்கு ஒன்று நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது பற்றியும் கர்தினால் அறிவித்தார்.

பொதுவான விசுவாசத்தின் கோட்பாடுகள், மீட்பு, ஏற்புடைமை, தூய்மைத்துவம் திருச்சபை, திருமுழுக்கு, திருநற்கருணை ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய இப் புத்தகம், 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் புரிந்து கொள்ளாமை குறித்தவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் விளக்குவதாகக் கர்தினால் அறிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.