2009-10-17 17:54:40

எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் தாயிலிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், பன்னாட்டு கருத்தரங்கு வலியுறுத்தல்


அக்.17,2009 எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் தாயிலிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென உரோமையில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனமும் திருப்பீடத்துக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகமும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில், வத்திக்கானும் அமெரிக்காவும் இணைந்து எய்ட்ஸ் நோயை அகற்றுவதற்கு சேர்ந்து செயல்படுவதறகுத் தீர்மானித்தன.

ஒவ்வோர் ஆண்டும் 15 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய மூன்று இலட்சத்து எழுபதாயிரம் சிறார், எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர், இதில் பெரும்பாலானோர் தங்கள் தாயிடமிருந்து பெறுகின்றனர் என்று இக்கருத்தரங்கில் கூறப்பட்டது.

இவ்வாறு பாதிக்கப்படுவதில் ஏறக்குறைய 90 விழுக்காடு ஆப்ரிக்காவில் இடம் பெறுகின்றது மற்றும் அக்கண்டத்தில் இந்நோயினால் தினமும் 800 சிறார் வீதம் இறக்கின்றனர் என்றும், இச்சிறார் தங்களது தாயின் கர்பபகாலம், குழந்தை பிறப்பு அல்லது பாலூட்டும் காலத்தில் பெறுகின்றனர் என்றும் இக்கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.

உலகம் இச்சிறாரைப் புறக்கணிக்கின்றது என்றுரைத்த சர்வதேச காரித்தாஸ் பொதுச் செயலர் லெஸ்லெ ஆன், இச்சிறாரில் 50 விழுக்காட்டினர் இரண்டு வயதை எட்டுமுன்னரே இறந்து விடுகின்றனர் என்று கூறினார்.

மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய உலக நலவாழ்வு நிறுவனத்தின் எய்ட்ஸ் பிரிவின் டாக்டர் அந்தோணியோ ஜெர்பாஸ், இந்நிறுவனம், 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், இந்நோயால் தாக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் சிறாருக்கும் சிகிச்சை அளிக்கவும், தாயிலிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடும் என்று அறிவித்தார்.



 








All the contents on this site are copyrighted ©.