2009-10-17 17:52:53

அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் தங்களின் பங்கு பற்றி ஆப்ரிக்கப் பேரவைத் தந்தையர் சிந்தித்து வருகின்றனர், நைஜீரியப் பேராயர்


அக்.17,2009 வத்திக்கானில் நடைபெற்று வரும் ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்ற அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் தங்களின் பங்கு என்ன என்பது பற்றிப் பேரவைத் தந்தையர் சிந்தித்து வருவதாக நைஜீரியப் பேராயர் ஒருவர் கூறினார்.

இப்பேரவை குறித்து பத்திரிகையாளருக்கு விளக்கிய நைஜீரியாவின் அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan, இதில் விவாதிக்கப்பட்டுவரும் விவகாரங்கள் பேரவைத் தந்தையரைச் சுயபரிசோதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்று கூறினார்.

திருச்சபையின் வாழ்வு, அது அரசியல் தலைவர்களிடமும் பிற மதத்தவரிடமும் அணுகும் முறை, அக்கண்டத்தை இன்னலுக்கு உட்படுத்தி வரும் அநீதிகளை எவ்வாறு நீக்குவது ஆகியவை பற்றி பேரவைத் தந்தையர் சிந்தித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

குறிப்பாக, ஆப்ரிக்காவின் இயற்கை வளங்கள் பன்னாட்டு கம்பெனிகளால் சுரண்டப்படுவது, சுற்றுச்சூழல் அழிக்கப்படுவது, பொருளாதார அபகரிப்பு ஆகியவை குறித்த கேள்விகள் பேரவையில் அடிக்கடி எழும்புவதாக பேராயர் Onaiyekan தெரிவித்தார்.

இந்தப் பன்னாட்டு கம்பெனிகள், ஆப்ரிக்கக்கண்டத்திலிருந்து சுரண்டும் பொருட்களுக்கு நியாயமான விலையும் கொடுப்பதில்லை என்று கூறிய அவர், கனிமவளச் சுரங்களில் வேலை செய்யும் போது மற்ற கண்டங்களில் பின்பற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆப்ரிக்காவில் பின்பற்றப்படுவதில்லை என்ற கவலையையும் தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.